துப்புரவு பணியில் 16,913 பேர் அதிகாலை 2.30 மணி வரை குப்பை அகற்றம் கண்காணிப்பு
சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, ஆணையாளர் விக்ரம் கபூர் ஆகியோர் இரவு நேரத்தில் குப்பை எடுக்கும் பணியை ஆய்வு செய்தனர். இரவு 9 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
அப்போது, மேயர் சைதை துரைசாமி கூறியதாவது:
தினமும் சராசரியாக பகல் நேரத்தில் 3266 மெட்ரிக் டன்னும், இரவு நேரத்தில் 1523 மெட்ரிக் டன் குப்பையும் என நாள் ஒன்றுக்கு 4789 மெட்ரிக் டன் குப்பை அகற்றப்படுகிறது. இதற்காக கூடுதலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாளரை நியமிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கூடுதலாக 8300 பேர் துப்புரவு பணிக்காக நியமிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், குப்பை அகற்றும் பணியில் 9537 நிரந்தர பணியாளர், தற்காலிகமாக 570 பணியாளர், ஒப்பந்த அடிப்படையில் 6806 பேர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது சென்னை மாநகராட்சியில் மொத்தம் 16,913 துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.