தினமணி 4.11.2009
ஆசாரிப்பள்ளம் பேரூராட்சியில் ரூ. 17 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்
நாகர்கோவில், நவ. 3: ஆசாரிப்பள்ளம் பேரூராட்சிப் பகுதியில் ரூ. 17 லட்சம் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு குளச்சல் எம்எல்ஏ ஜெயபால் அடிக்கல் நாட்டினார்.
இப் பேரூராட்சிக்கு உள்பட்ட எறும்புகாடு என்ற இடத்தில் ரூ. 2.50 லட்சத்தில் படிப்பகம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 8 லட்சத்தில் ஆக்ஸிஜன் சேமிப்புக் கிடங்கு, ரூ. 2 லட்சத்தில் பழவிளையில் ஊர் படிப்பகம் கட்டுதல், தம்மத்துகோணம் ஞானம் காலனியில் ரூ. 3 லட்சத்தில் தெருக்களில் தார்தளம் அமைத்தல், ரூ. 1.50 லட்சத்தில் ஆசாரிப்பள்ளம் பேரூராட்சிப் பகுதியில் தெருவிளக்குகள் அமைத்தல் ஆகிய பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
ஆசாரிப்பள்ளம் பேரூராட்சித் தலைவர் வில்லியம், உறுப்பினர்கள் பால்தங்கம், ராஜேந்திரன், திருப்பதி, மாவட்ட காங்கிரஸ் செயலர் கந்தசாமி, ராஜாக்கமங்கலம் வட்டார காங்கிரஸ் தலைவர் தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல, கணபதிபுரம் அருகேயுள்ள புதூரில் ரூ. 2 லட்சத்தில் கட்டப்பட்ட கலையரங்கை எம்எல்ஏ திறந்துவைத்தார். எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இதற்கான தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஊர்ப் பிரமுகர் தங்கசாமி தலைமை வகித்தார். கணபதிபுரம் பேரூராட்சித் தலைவர் தாணுலிங்கம், செயல் அலுவலர் சேம்கிங்ஸ்டன், உறுப்பினர்கள் மணிகண்டராம், கார்மல் மேக்ளின், கலைச் செல்வி, கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.