சங்ககிரி, ஆக.30: சங்ககிரி பேரூராட்சி உறுப்பினர்கள் கூட்டம் பேரூராட்சி மன்றக் கூட்ட அரங்கில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
இதற்கு பேரூராட்சித் தலைவர் ஆர்.செல்லப்பன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் எஸ்.வேதமணி முன்னிலை வகித்தார். இதில், துணைத் தலைவர் எஸ்.வெண்ணிலா செல்வம், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சங்ககிரி பேரூராட்சியின் பொது சுகாதாரத்திற்கு திடக்கழிவு மேலாண்மை திட்ட பயன்பாட்டிற்கு பொது நிதியிலிருந்து புதிதாக 10 தள்ளுவண்டிகள் மற்றும் கொசு மருந்து அடிக்கும் புகைப் போக்கி இயந்திரம் ஒன்று வாங்குதல், 4-வது வார்டு ஈஸ்வரன் கோயில் அருகில் உள்ள தெப்பக் குளத்தின் நான்கு புறமும் உள்ள சுற்றுப்புறச் சுவர்களை புதுப்பித்தல், 3-வது வார்டு பவானி பிரதான சாலையிலிருந்து செக்கல்காடு புதுவளவு மாரியம்மன் கோயில் வரை சேதமடைந்துள்ள சாலையை தார்சாலையாக அமைத்து சாக்கடை கட்டுதல், பேரூராட்சி பொதுநிதியிலிருந்து பேரூராட்சிக்கு சொந்தமான நிலங்களை சுற்றி கம்பி வேலி அமைத்தல் உள்ளிட்ட 17 தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.