தினகரன் 28.09.2010
டெல்லியில் மாநகராட்சி அதிரடி விளையாட்டு கிராமத்தில் 170 நாய்கள் சிக்கின
புதுடெல்லி,செப்.28: விளையாட்டு கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாநகராட்சி நடத்திய வேட்டையில் 170 நாய்கள் சிக்கின.
காமன்வெல்த் போட்டிகள் வரும் 3ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், விளையாட்டு கிராமம் பற்றி, வெளிநாடுகளின் பிரதிநிதிகள் சரமாரி புகார் கூறியவண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், விளையாட்டு கிராமத்தின் அறைகளில் இருந்த பெட்ஷீட்டுகளில் விலங்குகளின் காலடித் தடங்கள் இருப்பதாக வெளிநாட்டு மீடியாக்களில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.
இதனால், வீரர்களுக்கு நாய்களால் தொல்லை ஏதும் வரக்கூடாது என்பதற்காக விளையாட்டு கிராமம் மற்றும் மைதானங்களில் நாய் வேட்டையை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியது.
கால்நடைத்துறை தலைவர் ஆர்.பி.எஸ்.தியாகி மேற்பார்வையில் நாய் பிடிப்பவர்கள் தீவிர வேட்டையில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டனர். விளையாட்டு கிராமம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மட்டும் 170 நாய்களை அவர்கள் பிடித்தனர்.
ஜவஹர்லால் நேரு மைதானம் மற்றும் மைதானங்களிலிருந்தும் சில நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துச் சென்றனர். இவ்வாறு பிடிக்கப்பட்ட நாய்கள், டிபென்ஸ் காலனியில் உள்ள விலங்குகள் வதை தடுப்புச் சங்கத்தின் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டன. அங்கிருந்து, காஜிப்பூரில் உள்ள நாய்கள் கருத்தடை மையத்துக்கு அனுப்பப்படும்.
இதுபற்றி மேயர் பிருத்விராஜ் சகானி கூறுகையில், “மைதானங்கள், விளையாட்டு கிராமத்தில் நாய் வேட்டை தொடரும். சாலைகளில் சுற்றித் திரியும் விலங்குகளால் ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மாநகராட்சி எடுக்கும்” என்றார்.