தினமலர் 27.10.2010
புதிய வீடு கட்ட 18 நிபந்தனைகள் விதிப்பதா நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் கடும் எதிர்ப்பு
திருநெல்வேலி : நெல்லை மாநகராட்சிப் பகுதியில் புதிய வீடு கட்ட 18 நிபந்தனைகள் விதிக்கப்பட்டதற்கு அனைத்து கவுன்சிலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காரசார விவாதம் நடந்தது. நெல்லை மாநகராட்சி சாதாரண மற்றும் அவசர கூட்டம் மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. கமிஷனர் சுப்பையன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு: சுப.சீத்தாராமன்: நெல்லை மாநகராட்சிப் பகுதியில் வீடுகள் கட்ட 18 புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுற்றிரிக்கை செய்தியாக வந்துள்ளது. இதுகுறித்த தகவல் மேயரின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டதா. மாநகராட்சி கவுன்சிலில் ஏன் ஒப்புதல் பெறவில்லை. அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த அதிகாரிகள் இந்த காரியத்தை செய்துள்ளனர். புதிய வீடு கட்ட தாசில்தார், வி.ஏ.ஓ.விடம் கையெழுத்து பெற கைகட்டி நிற்கவேண்டுமா. புதிய நிபந்தனைகளை உடனடியாக திரும்பபெறவேண்டும்.
சுப்பிரமணியன் (சேர்மன்): வீடு கட்ட விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைகளுக்கு ஒட்டுமொத்த கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாநகராட்சியில் வீடு கட்ட பிளான் அப்ரூவல் பெற ஒன்றரை ஆண்டு காத்திருக்கவேண்டியுள்ளது. பிளானை அப்ரூவல் வழங்காமல் “பேரம்‘ பேசுகின்றனர். அந்த செக்ஷனுக்கு மாதம் ரூ.10 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது. பாளை., நெல்லை தொகுதிகளில் திமுகவை தோற்கடிக்க அதிகாரிகள் சதி செய்கின்றனர். வேலை பார்க்க பிடிக்கவில்லை எனில் சென்னைக்கோ மற்ற ஊருக்கோ மாறுதல் ஆகி செல்லட்டும். அதற்காக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தக் கூடாது.
புதிய நிபந்தனைகளைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் தங்கராஜ், பால்கண்ணன், காங்கிரஸ் சார்பில் உமாபதிசிவன் பேசினர். விஸ்வநாதன்: புதிய நிபந்தனைகள் விதிக்கும் போது மண்டல தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்களிடம் கலந்து பேசி முடிவு செய்திருக்கவேண்டும். மேயர்: புதிய நிபந்தனைகள் சம்பந்தமாக கமிஷனர், செயற்பொறியாளரிடம் விளக்கம் கேட்டேன். உள்ளூர் திட்டக் குழுமத்தில் உள்ள நிபந்தனைகளை மாநகராட்சிக்கு அனுப்பியதன் பேரில் அதை அதிகாரிகள் கொடுத்துள்ளனர். அந்த நிபந்தனைகளில் எது தேவையோ அதை வைத்துக் கொண்டு மற்றவற்றை தவிர்க்கலாம். எந்தெந்த நிபந்தனைகளை வைத்துக் கொள்வது என்பது குறித்து மண்டல தலைவர்கள், முக்கிய கவுன்சிலர்கள் கலந்து பேசி முடிவு செய்யலாம்.
சுப.சீத்தாராமன்: உள்ளூர் திட்டக் குழுமத்தின் நிபந்தனைகளை நாம் பின்பற்றவேண்டும் என எந்த இடத்திலும் சொல்லவில்லை. எனவே அவற்றை ரத்து செய்யவேண்டும். பேபிகோபால்: மேயர் தான் கலந்து பேசி முடிவு செய்யலாம் என சொல்லிவிட்டார். பிறகு ஏன் அதையே பேசுகிறீர்கள். இவ்வாறு திமுக கவுன்சிலர் பேபிகோபால் பேசியதற்கு அதிமுக கவுன்சிலர் பால்கண்ணன், திமுக கவுன்சிலர்கள் கோபி, சேர்மன் சுப்பிரமணியன், விஸ்வநாதன், துரை, சுப்பிரமணியன் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
சுப்பிரமணியன்: புதிய பஸ்ஸ்டாண்டிற்கு சுந்தரலிங்கம் அல்லது தியாகி இம்மானுவேல் பெயரை சூட்டவேண்டும். தங்கராஜ்: மாநகராட்சியில் தச்சநல்லூர் மண்டலத்தில் வளர்ச்சி பணிகள் பின் தங்கியுள்ளது. இதுகுறித்து கமிஷனரை சந்தித்து முறையிடவேண்டும் என்றேன். ஆனால் கவுன்சிலர்களை சந்திக்க கமிஷனர் மறுத்துவிட்டதாக மண்டல தலைவர் சொல்கிறார். உமாபதிசிவன்: புதிய வீடு கட்ட விதித்துள்ள நிபந்தனைகளை ரத்து செய்யவேண்டும். தமிழ் மொழி செம்மொழி என சொல்லிவிட்டு நிபந்தனைகளையும் ஆங்கிலத்தில் கொடுத்துள்ளீர்கள். விஸ்வநாதன்: எல்லா மண்டலத்திலும் தண்ணீர் பிரச்னை உள்ளது. ஆனால் அடிபம்புகளை டெண்டர் எடுக்க ஆள் இல்லை என சொல்கின்றனர். பெரிய பெரிய பணிகளை மட்டும் டெண்டர் எடுக்கின்றனர். அவர்களிடம் அடிபம்பு பணிகளையும் எடுக்கச் சொல்லி கட்டாயப்படுத்தவேண்டும்.
பிரான்சிஸ்: நெல்லை மாநகராட்சியில் மரம் வளர்க்கும் திட்டத்தில் வளர்க்கப்பட்ட மரங்கள் வெட்டி கடத்தப்படுகின்றன. மரங்களை பாதுகாக்கவேண்டும். மரங்களுக்கு நம்பர் போடவேண்டும். உமாபதிசிவன்: பாதாள சாக்கடை திட்டத்திற்கு பங்களிப்பு கட்டணம் வசூலிக்க கூடாது. பிரான்சிஸ்: திருமலைக்கொழுந்துபுரம் குடிநீர் நீரேற்று நிலையத்தில் மோட்டார் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. பழுதை நீக்க பல லட்ச ரூபாய் செலவு செய்துள்ளதாக மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படுகிறது. இதை ஆய்வு செய்யவேண்டும். மேயர்: திருமலைக் கொழுந்துபுரம் குடிநீர் நீரேற்று நிலையத்தில் மோட்டார் பழுது அடிக்கடி ஏன் ஏற்படுகிறது என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்யவேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது. அவசர கூட்டத்தில் தனியாருக்கு வரிவசூல் முறையை கொடுப்பது சம்பந்தமான தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.
ரகுமத் நகரில் ரோடுகளின் குறுக்கே சுவர் ஆக்ரமிப்புக்களை மாநகராட்சி அகற்றுமா : நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் பிரான்சிஸ் பேசுகையில், “பாளை., ரகுமத்நகரில் மாநகராட்சி ரோடுகளின் குறுக்கே ஒரு தனியார் நிறுவனத்தினர் ஆக்ரமித்து சுவர் கட்டியுள்ளனர். இதுகுறித்து தினமலரில் செய்தி வெளியானது. அப்ரூவல் லேஅவுட்டில் அந்த இடங்கள் மாநகராட்சி இடம் என குறிப்பிடப்பட்டுள்ளது. வாட்டர் டேங்க் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 1.47 ஏக்கர் மாநகராட்சி இடமும் ஆக்ரமிக்கப்பட்டுள்ளது. இதனால் வாட்டர் டேங்க் கட்ட முடியவில்லை. அந்த இடம் ஆக்ரமிப்பு அகற்றப்படுவது எப்போது. மாநகராட்சி இடங்கள் ஆக்ரமிக்கப்படுகின்றன. அதை அகற்ற உத்தரவு போட்டாலும் அகற்றப்படுவதில்லை. எனது வார்டில் ரூ.10 கோடிக்கு வளர்ச்சி பணிகள் நடந்துள்ளது. ஆனால் மாநகராட்சி இடங்கள் ஆக்ரமிக்கப்படுவது தடுக்கப்படவில்லை என்றார்‘.
இதற்கு பதிலளித்து மேயர் பேசுகையில், “ரகுமத் நகரில் மாநகராட்சி இடங்கள் ஆக்ரமிப்பில் இருந்தால் அவை மீட்கப்படும். மாநகராட்சி இடங்கள் ஒன்றரை ஏக்கர் சுப்ரீம் கோர்ட் வரை சென்று ஏற்கனவே மீட்கப்பட்டுள்ளது. மாநகராட்சி இடங்களை வேலி போட்டு பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்‘.