திருச்சியில் 18 வார்டுகள் துப்புரவுப் பணி இனி தனியார்வசம்
திருச்சி காந்தி மார்க்கெட், சத்திரம் மற்றும் மத்திய பேருந்து நிலையங்களை உள்ளடக்கிய 18 வார்டுகளின் துப்புரவுப் பணிகள் செவ்வாய்க்கிழமை முதல்
தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 77,262 வீடுகள், மார்க்கெட், பேருந்து நிலையங்களில் தினசரி 121.95 டன் திடக்கழிவு அகற்றப்பட உள்ளது.
மாநகராட்சி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், இலகுரக தள்ளுவண்டி, வாகனக் குப்பைத் தொட்டிகள் உள்ளிட்டவற்றை வழங்கி கதர் மற்றும் கிராமத்
தொழில்துறை அமைச்சர் டி.பி. பூனாட்சி தொடக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து மேயர் அ. ஜெயா பேசியது:
திருச்சி மாநகராட்சியின் பொன்மலை கோட்டத்தில் 35,36,37,38,39,63,65 வார்டுகள், அரியமங்கலம் கோட்டத்தில் 7,28,29,61,62,64 வார்டுகள், கோ. அபிஷேகபுரம் கோட்டத்தில்
40,41.45 வார்டுகள், ஸ்ரீரங்கம் கோட்டத்தில் வார்டு எண் 9 என 18 வார்டுகளில் துப்புரவுப் பணிகளை ஸ்ரீனிவாஸ் வேஸ்ட் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் என்ற தனியார் நிறுவனம்
மூலம் மேற்கொள்ள 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் மூலம் 50 ச.கி. பரப்பளவில் உள்ள 77,262 வீடுகளிலும், காந்தி மார்க்கெட், சத்திரம் மற்றும் மத்திய பேருந்து நிலையங்களிலும் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு,
நாள்தோறும் 121.95 டன் திடக்கழிவுகள் அகற்றப்பட உள்ளன. 5-ம் தேதி முதல் துப்புரவுப் பணியை தனியார் நிறுவனம் மேற்கொள்ளும்.
இந்த 18 வார்டுகளில் ஏற்கெனவே பணியாற்றி வரும் மாநகராட்சிப் பணியாளர்கள், தளவாடப் பொருள்கள் மற்றும் வாகனங்கள் இதர வார்டுகளிலுள்ள பற்றாக்குறைக்கு ஈடு
செய்யப்படும் என்றார்.
நிகழ்வில், தலைமைக் கொறடா ஆர். மனோகரன், மாநிலங்களவை உறுப்பினர் டி. ரத்தினவேல், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மு. பரஞ்சோதி, த. இந்திராகாந்தி, ஆர்.
சந்திரசேகர், ஆணையர் வே.ப. தண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.