தினமலர் 12.03.2010
18 மளிகை கடைகளில் கலப்படம் பற்றி ஆய்வு
ஆத்தூர்: ஆத்தூர், தலைவாசல் சுற்றுவட்டார பகுதியில் 18 மளிகை கடைகளில் கலப்பட உளுந்து, துவரம் பருப்புகளை பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சுகாதார துணை இயக்குனர் நிர்மல்ஸன் உத்தரவுபடி நேற்று தலைவாசல், வீரகனூரில், மருத்துவ அலுவலர் செந்தில் தலைமையிலான அலுவலர்கள் ஆய்வு செய்தனர். 18 மளிகை கடைகளில் இருந்து சந்தேகத்துக்குரிய உளுந்து, துவரம் பருப்பு பறிமுதல் செய்து உணவு பகுப்பாய்வு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சியில் பகுதியிலுள்ள மளிகை கடை, ஜெனரல் ஸ்டோர்களில் நகராட்சி உணவு, சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தி பருப்பு மாதிரிகளை சேகரித்தனர்.
பொது சுகாதார துறையினர் கூறுகையில், “”வடமாநிலத்தில் விளையும் கேசரி பருப்புகளை குறைந்த விலைக்கு வாங்கி துவரம், உளுந்து பருப்புகளில் கலந்து விற்பனை செய்கின்றனர். கூடுதல் விலைக்கு பருப்பு விற்பதால் கலப்படம் இருப்பதாக அரசுக்கு புகார் வந்ததையடுத்து ஆய்வு பணிகளை மேற்கொள்ளப்படுகிறது. “”கலப்படமான பருப்புகளை உண்பதால் கால் ஊனம், உடல் செயலிழப்பு, உடல் உபாதை, அஜீரண கோளாறு ஏற்படும். உளுந்து, துவரம் பருப்பு மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும். கலப்படம் செய்தது உறுதியானால், வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றனர்.
வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் சந்திரசேகர், பாண்டியன், பாபு, உணவு ஆய்வாளர் சுந்தர்ராஜ், முனுசாமி, சுகாதார ஆய்வாளர் சேகர், தங்கராசு, செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.