தினமலர் 12.03.2010
ரூ.18 கோடி ‘ரிசர்வ் சைட்கள்‘ மீட்பு : கூடலூர் பேரூராட்சி அதிரடி
பெ.நா.பாளையம் ;கூடலூர் பேரூராட்சியில், தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 18 கோடி ரூபாய் மதிப்பிலான “ரிசர்வ் சைட்கள்‘ மீட்கப் பட்டன. கூடலூர் பேரூராட்சியின் 18 வார்டுகளில் ஏராளமான “லே– அவுட்‘கள் உள்ளன. ஒவ்வொரு “லே – அவுட்‘டின் மொத்த பரப்பில் 10 சதவீத இடம் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக “ரிசர்வ் சைட்டாக‘ ஒதுக்கப் பட்டுள்ளது; இவற்றில் பல, தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளன. சில இடங்களில் “ரிசர்வ் சைட்‘ இருந்ததற்கான சுவடே இல்லாத அளவுக்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புகார் வந்ததை தொடர்ந்து, “ரிசர்வ் சைட்‘களை கண்டறிந்து, மீட்கும் பணியில் பேரூராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதில், ஒன்பதாவது வார்டு சுப்பையா நகரில் 30 சென்ட், இரண்டாவது வார்டு ஸ்ரீகணேஷ் நகரில் 27 சென்ட், ஏழாவது வார்டு நேரு நகரில் 40 சென்ட், எட்டாவது வார்டு சிந்து நகரில் 20 சென்ட், ஏழாவது வார்டு வனிதா நகரில் 18 சென்ட் மற்றும் மற்றொரு லே– அவுட்டில் 17 சென்ட்டில் “ரிசர்வ் சைட்‘கள் இருப்பது கண்டறியப்பட்டு கம்பி வேலி அமைக்கும் பணி நடக்கிறது.இதே போன்று பிரிக்கால் நகர், வெங்கடாசலபதி நகர், ஜெயவர்த்தனவேலு நகர், லட்சுமி கார்டன், தேவையம்பாளையம், வஞ்சிமா நகர், பேராசிரியர் காலனி, மாணிக்கவாசக நகர், கே.ஆர்.நகர், சந்திரமணி நகர், விவேகானந்தா நகர், புவனேஸ்வரி நகர், ரங்கநாயகி நகர், பி அண்ட் டி காலனி உள்ளிட்ட 27 இடங்களில் மொத்தம் 952 சென்ட் 84 சதுர அடி அளவில் “ரிசர்வ் சைட்கள்‘ இருப்பது கண்டறியப்பட்டு, வேலி அமைக்கும் பணி நடக்கிறது. இவற்றின் தற்போதைய மதிப்பு 18 கோடி ரூபாய்.
கூடலூர் பேரூராட்சி செயல்அலுவலர் கல்யாணசுந்தரம் கூறியதாவது, “”பேரூராட்சி அலுவலக ஆவணங்களின் படி “ரிசர்வ் சைட்‘கள் மீட்கப்படுகின்றன. “”அந்த இடங்களில் பேரூராட்சி நிதி உதவியில் பூங்கா, சிறுவர் விளையாட்டுத்திடல், சமுதாய கூடம் மற்றும் மக்களின் பயன்பாட் டுக்கான கட்டடங்கள் கட்டப்படும். “”பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியார் ஆக்கிரமிப்பிலுள்ள, பராமரிப்பற்ற “ரிசர்வ் சைட்‘கள் குறித்து பொதுமக்கள் தெரிவிக்கலாம்,” என்றார்.