தினமலர் 21.07.2010
பீதாம்புராவில் அமைகிறது ரூ.18 கோடியில் பாதாள பார்க்கிங்
புதுடெல்லி, ஜூலை 21: பீதாம்புராவில் ரூ.18 கோடி செலவில் பாதாள பார்க்கிங்கை மாநகராட்சி அமைக்கிறது. இதற்கான அடிக்கல்லை பா.ஜ. தலைவர் விஜேந்தர குப்தா நாட்டினார்.
வடமேற்கு டெல்லியின் பீதாம்புராவில் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடம் இல்லாததால் பலர் சாலையோரங்களிலேயே பார்க்கிங் செய்து விடுகின்றனர். இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டு வந்தது.இந்தப் பிரச்னையை தீர்க்கும் வகையில், பீதாம்புராவில் பாதாள பார்க்கிங் கட்ட மாநகராட்சி முடிவு செய்தது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. மாநில பா.ஜ. தலைவர் விஜேந்தர குப்தா அடிக்கலை நாட்டி வைத்து பேசினார்.
நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் பிருதிவிராஜ் சகானி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். ரூ.18 கோடியில் பல அடுக்குகளாக அமையவுள்ள இந்த பாதாள பார்க்கிங்கில், ஒரே நேரத்தில் 125 கார்களை நிறுத்த முடியும்.
அதன்பிறகு, பீதாம்புரா கியூ.யு. பிளாக்கில் பல்வேறு புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட பூங்காவையும் விஜேந்தர குப்தா திறந்து வைத்தார். இந்த பூங்கா, ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. நடைபாதை வசதியுடன் உயர்கோபுர மின்விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.