தினமலர் 14.05.2010
மாசானியம்மன் கோவில் பக்தர்களுக்கு ரூ.1.80 கோடி செலவில் தங்கும் அறை : ஆனைமலை பேரூராட்சி திட்டம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 1.80 கோடி ரூபாய் செலவில் தங்கும் அறைகள் மற்றும் வணிக வளாகங்கம் கட்டப்படுகிறது.
ஆனைமலை பேரூராட்சி தலைவர் அசோக் சண்முகசுந்தரம் கூறியதாவது: மாசாணியம்மன் கோவிலுக்கு உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளிநாட்டிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் வசதிக்காக, 1.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில், போலீஸ் ஸ்டேஷன் வீதியில் 20 தங்கும் அறைகளும், 36 கடைகளும் கட்டப்படுகின்றன. இதற்கான திட்ட மதிப்பீடு தயாரித்து அரசு அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு, தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்திடம் 30 சதவீத மானியத்துடன், நிதியுதவி பெறப்படும். இதன் மூலம் பக்தர்களுக்கு வசதி ஏற்படுவதுடன், பேரூராட்சிக்கும் நல்ல வருமானம் கிடைக்கும்.’ இவ்வாறு, பேரூராட்சி தலைவர் தெரிவித்தார். செயல் அலுவலர் செல்வராஜ், துணைத்தலைவர் ஜாபர் அலி உட்பட பலர் உடனிருந்தனர்.