தினமலர் 09.04.2010
1,840 கிலோ போலி டீத்தூள் அழிப்பு: தேயிலை வாரியம் நடவடிக்கை
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பறிமுதல் செய்த 1,840 கிலோ போலி டீத்தூளை தேயிலை வாரிய அதிகாரிகளும், சுகாதார அதிகாரிகளும் அழித்தனர். பொள்ளாச்சியில் தென்னிந்திய தேயிலை வாரிய செயல்இயக்குனர் நசீம் தலைமையில் அதிகாரிகள் பிப். 13ம் தேதி பொள்ளாச்சியில் ரெய்டு நடத்தினர். அப்போது, மார்க்கெட் ரோட்டில் ‘கணேஷ் டிரேடர்ஸ்‘ நிறுவனத்தின் பின் பகுதியில் ரகசிய அறையில் கலப்படம் செய்த டீத்தூள்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
குடோனின் மேல் பகுதியில் ஆய்வு செய்த போது மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய ரசாயன பவுடர்கள் பதுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. கலப்படம் செய்யப்பட்ட டீத்தூளை பேக்கிங் செய்வதற்காக, ‘பிராண்ட்‘ கம்பெனி பெயர்களில் தயாரிக்கப்பட்டிருந்த போலி லேபிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ‘நியூ கணேஷ் டீ டிரேடர்ஸ்‘ என்ற கடையிலும் கலப்பட டீத்தூள் கண்டுபிடிக்கப்பட்டது. உடுமலை ரோட்டில் சக்தி கூட்டுறவு தொழில்பேட்டையில் ‘டாப்சன் புட் புராடெக்ஸ்‘ நிறுவனத்தில் ஆய்வு செய்து, கலப்படம் செய்வதற்கு பயன்படுத்தும் இயந்திரங்களையும், ரசாயன பவுடர்கள், டீத்தூள் பண்டல்களை பறிமுதல் செய்தனர். பொள்ளாச்சியில் மொத்தம் எட்டாயிரம் கிலோ டீத்தூள் பண்டலுக்கு சீல் வைக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட கலப்பட டீத்தூள், ரசாயன பவுடர் ஆகியவற்றில் மாதிரி எடுத்து மைசூரிலுள்ள ஆராய்ச்சி மையத்திற்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். ஆய்வில், டீத்தூளில் ரசாயன பவுடர் கலந்திருப்பதும், அதை பயன்படுத்துவோருக்கு பல்வேறு நோய்கள் வருவதற்கும் வாய்ப்புள்ளதாக உறுதி செய்யப்பட்டது. தேயிலை வாரிய செயல் இயக்குனர் உத்தரவின்பேரில், தேயிலை வாரிய கண்காணிப்பாளர் ஜான் பேட்ரிக், இன்ஸ்பெக்டர் தியாகராஜன், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், தெற்கு வட்டார சுகாதார ஆய்வாளர்கள் கலப்பட டீத்தூள் அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தேயிலை வாரிய கண்காணிப்பாளர் ஜான்பேட்ரிக் கூறியதாவது: பொள்ளாச்சியில் 4,460 கிலோ டீத்தூள் சீல் வைக்கப்பட்டு மாதிரி எடுக்கப்பட்டது. இவை உயிருக்கு கேடு விளைவிக்கும் ரசாயனம் பவுடர் கலப்படம் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது. பொள்ளாச்சி கணேஷ் டிரேடஸ், டாப்சன் நிறுவனத்தில் மொத்தம் 1,840 கிலோ டீத்தூளில் சுண்ணாம்பு பவுடர் கலந்து குழிதோண்டி அழிக்கப்பட்டது. மீதமுள்ள 2,620 கிலோ டீத்தூள் பண்டலுக்கு சீல் வைக்கப்பட்டு மறுமாதிரி எடுக்கப்பட்டுள்ளது. டீத்தூளில் கலப்படம் செய்த கணேஷ் டிரேடர்ஸ் உரிமையாளர் விஜயகுமார், டாப்சன் நிறுவன உரிமையாளர் கணேஷ் மீது சுகாதார அதிகாரிகள் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கவுள்ளனர். பொள்ளாச்சியில் டீத்தூள் கலப்பட தொழிற்சாலை நடத்துவதால், அவர்களின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.