தினகரன் 22.09.2010
ஒரே நாளில் 1859 பேருக்கு தடுப்பூசி
நேற்று ஒரே நாளில் 1,859 பேர் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி மற்றும் மருந்து போட்டுக் கொண்டனர். சென்னையில் பன்றிக் காய்ச்சல் நோயை தடுக்க மாநகராட்சியின் சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பன்றிக் காய்ச்சல் நோய்க்கான அறிகுறி தெரிந்தால் எப்படி சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தனியார் மருத்துவமனை டாக்டர்களுக்கு மாநகராட்சி சார்பில் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.
பன்றிக் காய்ச்சல் நோய் தடுப்புக்காக கிண்டி கிங் ஆய்வு மையத்தில் மட்டுமே வாக்சிபுளு தடுப்பூசி மற்றும் மூக்கு வழியாக செலுத்தப்படும் நாசோவாக் மருந்து போடப்பட்டு வந்தது. இதனால் கிங் ஆய்வு மையத்தில் கூட்டம் அலைமோதியது. மக்கள் வசதிக்காக மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் மருத்துவ பகுப்பாய்வு மையங்களில் இந்த தடுப்பூசி மருந்துகளை போட மாநகராட்சி ஏற்பாடு செய்தது.
அதன்படி, வள்ளுவர் கோட்டம், திருவான்மியூர், பெரம்பூர், ஈவெரா சாலை, சைதாப்பேட்டை, சூளை ஆகிய இடங்களில் உள்ள பகுப்பாய்வு மையங்களில் தடுப்பூசி மருந்து திங்கட்கிழமை முதல் போடப்பட்டு வருகிறது. மூக்கு வழியாக செலுத்தப்படும் மருந்துக்கு ரூ100 வசூலிக்கப்படுகிறது. தடுப்பூசிக்கு ரூ200 வசூலிக்கப்படுகிறது. இந்த 6 மையங்களில் நேற்று ஒரே நாளில் 1167 பேர் தடுப்பூசியும், 692 பேர் மூக்கு வழியாக மருந்தும் போட்டுக் கொண்டனர் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.