தினமலர் 30.11.2010
மாநகராட்சியில் ரூ.187.82 கோடியில் வளர்ச்சி பணி
திருப்பூர்:””திருப்பூர் மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன; சாலை பணி, வடிகால் பணி, கட்டட பணி, குடிநீர், தெருவிளக்கு, பாதாள சாக்கடை திட்டம் என 187.82 கோடி மதிப்பீட்டில் பல பணிகள் நடந்துள்ளன,” என மேயர் செல்வராஜ் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: திருப்பூர் மாநகராட்சியில் 38.04 கோடி ரூபாயில் சாலைப்பணி, 74.95 கோடி ரூபாயில் வடிகால் பணி, 15 பள்ளி கட்டடங்கள், 28 ரேஷன் கடைகள், இரண்டு சத்துணவு கூடங்கள், நான்கு அலுவலக கட்டடங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார மையம் என 15.40 கோடி ரூபாயில் பணிகள் நடந்துள்ளன. ஆழ்துளை கிணறுகள், மின் மோட்டார் மற்றும் தொட்டிகள், குடிநீர் வினியோக குழாய்கள் என குடிநீர் பணிகளுக்காக 8.36 கோடி ரூபாயில் பணிகள் நடந்துள்ளன. 63 தெருவிளக்குகள், 3.75 கோடி ரூபாய்க்கு அமைக் கப்பட்டுள்ளன.
ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசை பகுதி மேம்பாட்டு திட்டத் தில் 2,060 வீடுகள், 10.63 கோடி ரூபாயில் புதிதாக கட்டப்பட்டும், பழுதடைந்த வீடுகள் புதுப்பித்து கட்டப்பட்டு வருகின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இதில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. பாதாள சாக்கடை திட்டத்துக்காக 4.64 கோடி ரூபாய்; திடக்கழிவு மேலாண்மைக்காக 9.67 கோடி ரூபாய்; சிறப்பு சாலை திட்டத்தில் 21.02 கோடி ரூபாய் என 187.82 கோடி ரூபாயில், மாநகராட்சி பகுதியில் மக்களுக்கான வளர்ச்சி பணிகளும், நலத்திட்ட பணிகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளன. 40 கோடி ரூபாயில், வரன்முறைப் படுத்தப்பட்ட பகுதிகளில் சாக்கடை கால்வாய் கட்டும் பணி; குமார் நகர் மாநகராட்சி பள்ளி, ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி, பத்மாவதிபுரம் மாநகராட்சி பள்ளி, கருவம்பாளையம் மாநகராட்சி பள்ளிகளில் வகுப் பறை கட்டடங்கள், ஜெய்வாபாய் பள்ளியில் ஒரு கோடி ரூபாய் செலவில் கலையரங்கம், என பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பாறைக்குழிகளில் கொட்டப்படும் குப்பையால் பாதிப்பு ஏற்படாதபடி, துப்புரவு மற்றும் சுகாதார பணி நடக்கிறது. இவ்வாறு, மேயர் செல்வராஜ் கூறினார்.