தினமணி 22.02.2010
ரூ. 1.88 கோடியில் தார்ச் சாலை
பெரம்பலூர், பிப். 21: பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட 21 வார்டுகளிலும் ரூ. 1.88 கோடியில் தார்ச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக நகர்மன்றத் தலைவர் எம்.என். ராஜா தெரிவித்தார். நகராட்சிக்குள்பட்ட 21 வார்டுகளிலும், ரூ. 23.38 கோடியில் புதைச் சாக்கடைத் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. புதைச் சாக்கடைத் திட்டப் பணிகள் நிறைவடைந்த பகுதிகளில் தார்ச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பெரம்பலூர் 6-வது வார்டு பகுதியில் ரூ. 23 லட்சத்தில் தார்ச் சாலை அமைக்கும் பணிகளை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்த நகராட்சித் தலைவர் எம்.என். ராஜா கூறியது:
நகராட்சிக்குள்பட்ட 21 வார்டுகளிலும் புதைச் சாக்கடைத் திட்டப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இந்தத் திட்டப் பணிகள் நிறைவடைந்த பகுதிகளில், நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டம் மற்றும் நகராட்சி பொது நிதியின் மூலம் தார்ச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதன் ஒருபகுதியாக 6-வது வார்டில் ரூ. 23 லட்சத்திலும், 7, 14-வது வார்டுகளில் ரூ. 24 லட்சத்திலும், 8-வது வார்டில் ரூ. 14.5 லட்சத்திலும், 11-வது வார்டில் ரூ. 30 லட்சத்திலும், 15-வது வார்டில் ரூ. 16 லட்சத்திலும் என 21 வார்டுகளிலும் ரூ. 1.88 கோடியில் தார்ச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 9 வார்டில் தார்ச் சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. அதைத் தொடர்ந்து, 12, 13 ஆகிய வார்டுகளில் பணிகள் தொடங்கும் என்றார் ராஜா. இந்த ஆய்வின் போது நகராட்சி வருவாய் உதவியாளர்கள் டி. அப்லோசன், எம். மகேஸ்வரன், இளநிலை உதவியாளர் கே. குமரன், பணி மேற்பார்வையாளர் எஸ். குமார். ஒப்பந்ததாரர் எஸ்.பி.டி. செந்தில் ஆகியோர் உடனிருந்தனர்.