தினமணி 18.01.2014
ஜனவரி 19, பிப்ரவரி 23-இல் 83 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து
சேலம் மாநகராட்சியில் வருகிற 19, பிப்ரவரி 23-ஆம் தேதிகளில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடத்தி, சுமார் 83 ஆயிரம் குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் மா. அசோகன் தெரிவித்தார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதி முழுவதும் ஜனவரி 19, பிப்ரவரி 23-ஆம் தேதிகளில் குழுந்தைகளுக்கு சிறப்பு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 184 மையங்களில் 5 வயதிற்கு உள்பட்ட சுமார் 83 ஆயிரம் குழந்தைகளுக்கு இலவசமாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளன.
போலியோ சொட்டு மருந்து மையங்கள் முறையே, மாவட்ட அரசு மருத்துவமனைகள், நகர் நல மையங்கள், மாநகராட்சி மருந்தகங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகிய இடங்களில் அமைக்கப்பட உள்ளன.
இது தவிர 10 நடமாடும் குழுக்கள் மூலம் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் குடிசைப் பகுதிகள், சாலையோரத்தில் மக்கள் வசிக்கும் பகுதிகள், நாடோடிகள் வசிக்கும் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தி, சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் நேரில் சென்று குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாநகராட்சிக்கு 1 லட்சம் போலியோ சொட்டு மருந்துகள் பெறப்பட்டு குளிர் சாதன நிலையில் 9 மையங்களில் தயார் நிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மருத்துவ அலுவலர்கள், மருத்துவப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், நாட்டு நலப் பணித் திட்ட மாணவ – மாணவிகள், தொண்டு நிறுவனங்களைச் சார்ந்த உறுப்பினர்கள் சேர்ந்து சுமார் 1,200 பணியாளர்கள் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
22 மேற்பார்வையாளர்கள் சொட்டு மருந்து வழங்கும் பணியைக் கண்காணிக்க உள்ளனர்.
19-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்கள் செயல்படும். அதைத் தொடர்ந்து, வீடு வீடாகச் சென்று ஒரு குழந்தை கூட விடுபடாமல் இருக்கவும், விடுபட்டக் குழந்தைகளைத் தொடர்ந்து பார்வையிட்டு சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. போலியோ சொட்டு மருந்து வழங்கி, போலியோ நோயை முற்றிலும் ஒழித்திட அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க முன் வர வேண்டும். போலியோ நோய் இல்லாத மாநகராட்சியாக சேலம் திகழ்ந்திட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.