தினமணி 05.09.2013
தினமணி 05.09.2013
கம்பம் நகராட்சியில் ரூ.19 கோடியில் புதிய குடிநீர்த் திட்டம்
கம்பம் நகராட்சி புதிய குடிநீர் திட்டத்துக்கு, லோயர் கேம்ப்பிலிருந்து பிரதான இரும்பு குழாய் பதிக்கும் பணி துவங்கி உள்ளது.
கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேலான
மக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சி மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
லோயர் கேம்ப் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில், காந்தி நகர்,
நந்தகோபாலன் கோயில் வளாகம், தாத்தப்பன் குளம், வாரசந்தை வளாகம்,
ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள
மேல்நிலைத் தொட்டிகள் மூலம் நகராட்சிப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம்
நடைபெற்று வருகிறது.
மேலும், 190-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள், மின்விசை பம்புகளாக
மாற்றப்பட்டுள்ள போதிலும், குடிநீர் பற்றாக்குறை இருந்து கொண்டே
இருக்கிறது. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பல வார்டுகளிலும் குடிநீர்
முற்றிலும் தடைபட்டதால், பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் உள்ளிட்ட
பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், 3 மாதங்களுக்கு முன் தமிழக முதல்வர் ரூ. 19 கோடி
மதிப்பில் கம்பத்தில் புதிய குடிநீர்த் திட்டத்துக்கு காணொலி காட்சி மூலம்
அடிக்கல் நாட்டினார்.
இதுவரை, லோயர் கேம்ப் முதல் கம்பம் வரை சுமார் 23 கி.மீ. தொலைவு
1955ஆம் ஆண்டு முதல் குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் சிமெண்ட் குழாய்
பதித்து தண்ணீர் விநியோகம் செய்து வரப்பட்டது. இதில், அடிக்கடி குழாய்
உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் விநியோகம் செய்வதில் பிரச்னை ஏற்பட்டு வந்தது.
தற்போது, புதிய குடிநீர்த் திட்டத்தில் கம்பம் நகராட்சிக்கு தனியாக
லோயர் கேம்ப் முதல் கம்பம் நீரேற்று நிலையம் வரை 23 கி.மீ. தொலைவுக்கு
புதிதாக பிரதான இரும்புக் குழாய் பதிக்கும் பணியை துவக்கியுள்ளனர்.
தற்போது, தனிநபர் ஒருவருக்கு 69 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கப்பட்டு
வருகிறது. இந்தத் திட்டம் முடிந்த பின்னர் இது 98 லிட்டராக உயர்த்தி
வழங்கப்படும் என்றார் நகராட்சித் தலைவர் டி.சிவக்குமார்.