தினமலர் 01.11.2010
பில்லூர் 2வது குடிநீர் திட்ட பணிகளில் அலட்சியம்:பாழாகின்றன, ரூ.பல லட்சம் சாதனங்கள்!
பில்லூர் 2வது குடிநீர் திட்டப்பணிகளுக்காக பல லட்சம் ரூபாயில் வாங்கப்பட்டுள்ள எலக்ட்ரானிக் டிரான்ஸ்பார்மர்கள் உள்ளிட்ட சாதனங்கள், உரிய பாதுகாப்பு வசதிகளின்றி மழை நீரில் நனைந்து நாசமாகி வருகின்றன. கோவை மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 140 கோடி ரூபாயில், “பில்லூர் 2வது குடிநீர் திட்டம்‘ தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. வரும் 2011 மே மாதத்துக்குள் மக்களுக்கு குடிநீர் சப்ளையை துவக்க அரசு உத்தரவிட்டுள்ளதால், அதிகாரிகள் பம்பரமாக சுழன்று பணியாற்றுகின்றனர். பில்லூர் அணையில் எடுக்கப்படும் (பம்ப்) 125 எம்.எல்.டி., தண்ணீர், சுரங்கம் வழியாக வெள்ளியங்காடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு வரப்படவுள்ளது. சேறு, சகதி கலந்து வரும் நீரை சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள அதிநவீன எலக்ட்ரானிக் இயந்திரங்கள் மூலம் சுத்திகரிக்கப்பு செய்யப்படவுள்ளது. அதன்பின், சுத்தம் செய்த தண்ணீர் எலக்ட்ரானிக் டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் மோட்டார் மூலம் கோவை மாநகருக்கு குழாய் வழியாக பம்பிங் செய்யப்படவுள்ளது. இத்திட்டத்துக்கு தேவையான 370 கிலோவாட் பவர் கொண்ட 6 மின்மோட்டார்கள், பம்ப்செட் வால்வுகள், வடிகட்டும் சாதனங்கள், தொட்டிகளுக்கு உண்டான உபகரணங்கள், வடிகட்டும் தொட்டிகளுக்கு தேவையான வால்வுகள், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை கோவைக்கு பம்பிங் செய்யும் எலக்ட்ரானிக் டிரான்ஸ் பார்மர்கள் வாங்கப்பட்டுள்ளன. இவை, எவ்விதமான பாதுகாப்பு வசதியும் செய்யாமல் பில்லூரில் திறந்த வெளியில்போட்டு வைக்கப்பட்டுள்ளன. அனைத்து சாதனங்களும் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் கொஞ்சம், கொஞ்சமாக நாசமடைந்து வருகின்றன. இதை பாதுகாக்க வேண்டிய ஒப்பந்ததாரர், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆகியோர் அலட்சியமாக உள்ளனர். இது குறித்து மின்வாரிய உயரதிகாரிகள் கூறியதாவது:
சுத்திகரிப்பு நிலையங்களில் குடிநீர் சுத்திகரிப்பு செய்யப்பட்ட பின், எலக்ட்ரானிக் டிரான்ஸ்பார்மர்களின் உதவியுடன்தான் நீரை குழாயில் பம்பிங் செய்ய முடியும். எனவே, எலக்ட்ரானிக் டிரான்ஸ்பார்மர்கள், சர்க்யூட்கள், பேனல் போர்டுகளை நீரில் நனைந்துவிடாமல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அதில் தண்ணீர் பட்டால் துரு பிடித்து நாசமாகிவிடும். தற்போது இக்குடிநீர் திட்டத்துக்கு வாங்கப்பட்டுள்ள எலக்ட்ரானிக் சாதனங்கள் பாதுகாப்பு இல்லாமல் வெட்டவெளியில் போடப்பட்டு மழையில் நனைந்து வருகின்றன. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் பழுதாகி, இயங்காத நிலை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. அப்படியே துவக்கத்தில் இயங்கினாலும், அடிக்கடி பழுதாகிவிடும். எனவே, எலக்ட்ரானிக் சாதனங்கள், மின் மோட்டார்களுக்கு ஷெட் அமைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது. இவ்வாறு, மின்வாரிய
அதிகாரிகள் தெரிவித்தனர்.
– நமது நிருபர் –