தினகரன் 15.12.2010
பரமக்குடி நகராட்சியில் வரி கட்டாத 2 கடைகளுக்கு சீல்
பரமக்குடி, டிச. 15: பரமக்குடி நகராட்சியில் சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரி செலுத்தாத 2 கடைகளுக்கு நேற்று கமிஷனர் அட்சயா சீல் வைத்தார்.
பரமக்குடியில் வணிக நிறுவனங்கள், குடியிருப்பு வீடுகளுக்கான 2010&11 ஆண்டிற்கான சொத்துவரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் நகராட்சி நிர்வாகம் மூலம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை சொத்துவரி ரூ110.74 லட்சம், காலியிடவரி ரூ6.74 லட்சம், தொழில்வரி ரூ41.81 லட்சம், குடிநீர் கட்டணம்
ரூ70.51 லட்சம், குத்தகை இனங்கள் ரூ20.13 லட்சம் என ரூ3 கோடியே 9 லட்சத்து 93 ஆயிரம் பாக்கி உள்ளது. வரிநிலுவை உள்ள நபர்கள் விரைவில் தாங்களாகவே வந்து பணத்தை கட்டி குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதையும், ஜப்தி நடவடிக்கையும் தவிர்க்க வேண்டும் என்று நகராட்சி சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது.
இந்நிலையில் 2006&11 வரை வரி பாக்கியுள்ள மாப்பிள்ளை சாமி என்பவரின் பெயரில் உள்ள 2 கடைகளை நேற்று கமிஷனர் அட்சயா போலீசார் உதவியுடன் சீல் வைத்தார். ஒரு கடையில் ரூ1 லட்சத்து 19 ஆயிரத்து 280 வரிபாக்கியும், மற்றொரு கடையில் ரூ86 ஆயிரத்து 660 வரிபாக்கியும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கமிஷனர் அட்சயா கூறுகையில், “குத்தகை வரி கட்டாத கடைகளுக்கு சீல் வைத்து மறு ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. சொத்துவரி, குடிநீர் கட்டணம் கட்டாத நபர்களின் குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும். இதுவரை குடிநீர் கட்டணம் நிலுவை வைத்துள்ள 40 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. தற்போது வரிபாக்கியுள்ள கடைகள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார்.