தினமணி 07.11.2009
பில்லூர் 2-வது கூட்டுக்குடிநீர் திட்டம்: தலைமைச் செயலர் திடீர் ஆய்வு
கோவை, நவ. 6: பில்லூர் 2-வது கூட்டுக்குடிநீர்த் திட்டப் பணிகளை, தமிழக அரசின் தலைமைச் செயலர் கே.எஸ்.ஸ்ரீபதி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.113.74 கோடியில் பில்லூர் 2-வது கூட்டுக்குடிநீர்த்திட்ட திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இத் திட்டத்தின் நீரேற்று நிலையம் வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் அமையவுள்ளது. இந்த இடத்தை மாநகராட்சி வசம் ஒப்படைப்பது தொடர்பாக தலைமைச் செயலர் ஆலோசனை நடத்தினார்.
மேலும், ரூ.2.24 கோடியில் பெரிய கோம்பை மலை குகையில் இருந்து நீர்சுத்திகரிப்பு நிலையம் வரையிலான பிரதான குழாய்கள் அமைத்தல், ரூ.20.94 கோடியில் வெள்ளியங்காடு பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல் ஆகிய பணிகளை அவர் ஆய்வு செய்தார்.
இப் பணிகளை ஒப்பந்த காலத்துக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
வெள்ளியங்காடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதியில் அவர் மரக்கன்றை நட்டார்.
ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா, நகராட்சி நிர்வாக இயக்குநரக தலைமைப் பொறியாளர் ஆர்.ரகுநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் மூர்த்தி, மண்டல வனப் பாதுகாவலர் கண்ணன், மாவட்ட வன அலுவலர் அன்வர்தீன், மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் கே.பூபதி, திட்டப் பொறியாளர் திருமாவளவன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளர் ரவிச்சந்திரன், மேற்பார்வைப் பொறியாளர் வேலுச்சாமி தமிழ்நாடு மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அண்ணாமலை ஆகியோர் உடன் இருந்தனர்.