தினமலர் 26.07.2012
மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு ரூ. 2 கோடிக்கு பணிவழங்க ஒப்புதல்
கோவை:கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிக்கு ரூ.2 கோடியில் பணிகள் துவக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கோவை மாநகராட்சியின் மத்திய மண்டல கூட்டம், மண்டலத் தலைவர் ஆதி நாராயணன் தலைமையில் நடந்தது.
ஆம்னி பஸ் ஸ்டாண்டு கழிப்பறை பராமரிப்பு, பாதாள சாக்கடை குழாய் பதிப்பு, சிமென்ட் தளம் அமைத்தல், தார் தளம் அமைத்தல்,பொதுக் கழிப்பிட மராமத்து, மழைநீர் வடிகால் தூர்வாருதல், குப்பைத் தொட்டி மராமத்து உட்பட பல்வேறு பணிகளை நிறைவேற்ற மொத்தம் 2 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு இக்கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
மேலும், ஐந்து லட்சம் ரூபாய் செலவில் ரோட்டிற்கு பேட்ச் பணி நடக்கும் தீர்மானம் வந்த போது, தி.மு.க., கவுன்சிலர் மீனா மற்றும் தே.மு.தி.க., கவுன்சிலர் சாவித்திரி பேசுகையில், “”எந்த வார்டில், எந்த பகுதியில் என குறிப்பிடாமல், பொதுவாக தீர்மானத்தை நிறைவேற்ற அனுமதிக்க முடியாது,” என்றனர். அரங்கம் என்னாச்சு?: கடந்த ஆட்சியில் தெற்கு மண்டல அலுவலகத்துக்கென கட்டப்பட்ட புதிய அலுவலகம்தான், தற்போது மத்திய மண்டல அலுவலகமாக செயல்பட்டு வருகிறது.
கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட இக்கட்டடத்தில், கூட்ட அரங்கின் பணிகளை முடிக்க, எவரும் கவனம் செலுத்தவில்லை. இதனால் கூட்ட அரங்கு பூட்டியே கிடக்கிறது. வேறு வழியில்லாமல் மண்டலத் தலைவரின் அறையில் நேற்றைய கூட்டம் நடந்தது.
மண்டல அலுவலகத்தில் கேட்டதற்கு, “கூட்ட அரங்கில் மின்சார இணைப்பு பணி இன்னும் பாக்கியுள்ளது. பணி முடிந்தபின் கூட்ட அரங்கில் மண்டல கூட்டம் நடத்தப்படும்’ என்றனர். மத்திய மண்டல அலுவலகத்துக்கு 3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் மின் இணைப்பு பெறுவதற்கான தீர்மானம், நேற்றைய கூட்டத்தில்தான் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. துணைமேயர் லீலாவதி, வரிவிதிப்புக் கமிட்டித் தலைவர் பிரபாகரன், கணக்குக் குழுத் தலைவர் கணேசன், எதிர்க்கட்சித் தலைவர் நந்தகுமார், கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.