தின மணி 18.02.2013
காரைக்காலில் 2 வார்டுகளில் இயற்கை உரம் தயாரிக்கும் மையம் தொடக்கம்
பிரான்ஸ் நாட்டு நிறுவனமும், காரைக்கால் நகராட்சி நிர்வாகமும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, காரைக்காலில் 2 வார்டுகளில் குப்பைகளை பிரித்து இயற்கை உரம் தயாரிக்கும் மையத்தை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஜெ. அசோக்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்கால் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை அமல்படுத்த பிரான்ஸ் நாட்டு கோத் தெ அர்மூர் பிராந்தியத்தில் உள்ள ஒரு அமைப்பு மற்றும் காரைக்கால் நகராட்சிக்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
இதன்மூலம் காரைக்கால் நகராட்சிப் பகுதியில் உள்ள வார்டுகளில் நாள்தோறும் சேமிக்கப்படும் குப்பைக் கழிவுகளைப் பயன்படுத்தி இயற்கை உரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும், திடக்கழிவு மேலாண்மை குறித்து செயல்முறை விளக்கம், பயிலரங்கம், அனுபவ பரிமாற்றம், பயிற்சி, கள ஆய்வின் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல், உலக அளவில் சுற்றுச்சூழல் மாசுபடுவதால் ஏற்படும் பாதிப்புகள், சுற்றுச்சூழல் மாசுபடுவதை கட்டுப்படுத்துதல் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நகராட்சிப் பகுதியில் நடத்துதல் இந்த ஒப்பந்தத்தின் முக்கியக் குறிக்கோளாகும்.
பொதுமக்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என எவ்வாறு பிரித்தறிவது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. இதனடிப்படையில் காரைக்கால் நகராட்சிக்குள்பட்ட வலத்தெரு வார்டு எண் -8, காதர் சுல்தான் வார்டு எண் – 11 ஆகியவற்றில் திடக் கழிவுகளைப் பயன்படுத்தி இயற்கை உரம் தயாரிக்கும் மையம் அமைக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் தலைமையில் புதுச்சேரி உள்ளாட்சித் துறை இயக்குநர், காரைக்கால் நகராட்சி ஆணையர், பிரான்ஸ் அரசின் ஒரு உறுப்பினர் என 4 பேர் கொண்ட குழு இத்திட்டத்தை கண்காணிக்கவும், ஆலோசனை மற்றும் இதரப் பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.