நிலத்தடி நீர் மேலாண்மை குறித்து 2 நாள் பயிற்சி தொடக்கம்
காரைக்காலில் நிலத்தடி நீர் மேலாண்மை குறித்த 2 நாள் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.
மத்திய நிலத்தடி நீர் வாரியம், தென்கிழக்கு கடலோர மண்டலம் சென்னை மற்றும் ராஜீவ் காந்தி தேசிய நிலத்தடி நீர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் கிராம அளவிலான நிலத்தடி நீர் தாங்கிகளின் மேலாண்மைத் திட்டம் என்ற 2 நாள் பயிற்சியை காரைக்காலில் திங்கள்கிழமை தொடங்கியது.
இப்பயிற்சியில் விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள், பல்வேறு துறையை சார்ந்தவர் என சுமார் 200 பேர் கலந்துகொண்டனர். நிலத்தடி நீர் அடுக்குகளை பற்றிய தகவல்கள் பயனாளிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
நீரடுக்குகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும், அதற்கான உத்திகள் குறித்தும் பயிற்சியாளர்கள் விளக்கிக் கூறினர்.
மத்திய நிலத்தடி நீர் வாரியம், தென்கிழக்கு மண்டல இயக்குநர் இ. சம்பத்குமார் பயிற்சியின் அவசியம் குறித்து பேசினார். காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநர் க. மதியழகன், பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளர் பி. சுவாமிநாதன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். நிறைவில், டி. ராஜேந்திரன் நன்றி கூறினார்.
2 நாள் பயிற்சியில் மத்திய நிலத்தடி நீர் வாரிய துறை அதிகாரிகள், விஞ்ஞானிகள் பங்கேற்கின்றனர்.
நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை மாணவர்களிடையே நீர் சேமித்தல் மற்றும் பாதுகாத்தல் குறித்த பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, நாடகப் போட்டி நடைபெறவுள்ளது.