பருவதமலையில் ரூ.2 கோடியில் அடிப்படை வசதிகள்
பருவதமலை மீது படிகள் அமைக்கவும், குடிநீர் வசதி செய்யவும் ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கலசப்பாக்கம் எம்எல்ஏ அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் 180 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் எம்எல்ஏ அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் விஜய் பிங்ளே ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
விழாவில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசியது:
தமிழகத்தில் இப்போது படிப்படியாக மின் வெட்டு நேரம் குறைந்து வருகிறது. இதுவும் விரைவில் சரி செய்யப்பட்டுவிடும். டெல்டா பகுதி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை நீங்கலாக 31 மாவட்டங்களையும் வறட்சி மாவட்டமாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இதனால் மற்ற மாவட்டங்களுக்கும் உரிய நிவாரணம் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது.
கலசப்பாக்கம் ஒன்றியத்தில் 67 புதிய வழித்தடங்களில் பேருந்து இயக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. 37 புதிய பகுதி நேர ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ரூ.8 கோடியில் மேலாரணி, மேல்சோழங்குப்பம் வழியாக ஜமுனாமரத்தூர் செல்ல சாலைப் பணி தொடங்கப்படவுள்ளது.
தென்மாதிமங்கலம் பருவதமலை மீது சென்று சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக படிகள் அமைக்கவும், மலை மீது குடிநீர் வசதி செய்யவும் சுற்றுலா துறை மூலம் ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கலசப்பாக்கத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
விழாவில், வட்டாட்சியர் கோபால் முன்னிலை வகித்தார். இடர்பாடு வட்டாட்சியர் முனியப்பன் வரவேற்றார். ஒன்றியக்குழுத் தலைவர்கள் ஜெயராமன் (கலசப்பாக்கம்), கோவிந்தராஜ் (துரிஞ்சாபுரம்), அதிமுக ஒன்றியச் செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட கவுன்சிலர்கள் கோவிந்தராஜ், சந்திரா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன்,பிச்சாண்டி மற்றும் அதிகாரிகள், அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.