மேலும் 2 இடங்களில் நாய்கள் இனக் கட்டுப்பாட்டு மையம்
சென்னையில் மேலும் இரண்டு இடங்களில் புதிதாக நாய்கள் இனக் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் தெரிவித்தார்.
சென்னையில் நாய்களின் தொல்லை பெருகி வருகிறது. குழந்தைகளை நாய் கடிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று ஆணையர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியது: சென்னையில் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் நாய்கள் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. நாய்களைக் கட்டுப்படுத்த புதிதாக 8 நாய் பிடிக்கும் வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாள்களில் மட்டும் 650 நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள நாய்களின் எண்ணிக்கை குறித்து விரிவான கணக்கெடுப்பு எடுக்கப்படும்.
சென்னையில் இப்போது 4 இடங்களில் நாய்கள் இனக் கட்டுப்பாட்டு மையங்கள் இயங்கி வருகின்றன. மேலும் இரண்டு இடங்களில் இந்த மையங்கள் அமைக்கப்படும்.
இப்போது ஒரு நாளைக்கு 80 முதல் 100 நாய்கள் வரை பிடிக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு 200 நாய்களை வரை பிடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தாண்டுக்குள் சுமார் 60,000 நாய்கள் வரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சென்னையில் கூடிய விரைவில் நாய்த் தொல்லை கட்டுப்படுத்தப்படும் என்றார் விக்ரம் கபூர்.