தினமலர் 27.03.2013
நகராட்சியில் சுற்றி திரியும் நாய்களுக்கு கருத்தடை ரூ.2 லட்சம் நிதி ஒதுக்கீடு
திருத்தணி:நகராட்சி தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களுக்கு கருத்தடை செய்வதற்காக, 2 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.திருத்தணி நகராட்சியில், மொத்தம் உள்ள, 21 வார்டுகளில், 168 தெருக்கள் உள்ளன. இங்குள்ள தெருக்கள் மற்றும் சாலைகளில் நாய்கள் அதிகளவில் சுற்றித் திரிவதால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின்றனர்.மேலும், தெருவில் நடந்து செல்லும் பொதுமக்களை நாய்கள் விரட்டி கடிக்கின்றன.
குறிப்பாக, சன்னிதி தெரு, மேட்டுத் தெரு, ம.பொ.சி., சாலை, ஜோதிசாமி தெரு, திருக்குளம், ராதாகிருஷ்ணன் தெரு, கச்சேரிதெரு, காந்திரோடு மற்றும் சென்னை பழைய சாலை ஆகிய இடங்களில் ஐந்து முதல், 10 நாய்கள் ஒன்றாக சுற்றித் திரிகின்றன.இதில், சொறி நாய்களும் சுற்றி திரிவதால், மக்களுக்கு நோய் தாக்கும் அபாயம் உள்ளது. நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து நகராட்சி ஊழியர்கள் தற்போது, நாய்களை பிடித்து கருத்தடை செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.இதுகுறித்து, நகராட்சிஆணையர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:மக்கள் புகாரை தொடர்ந்து, நாய்களை பிடித்து திருத்தணி உதவி கால்நடை துறை இயக்குனர் அலுவலகத்திற்கு அழைத்து சென்று, நான்கு மருத்துவர்கள் கருத்தடை செய்கிறோம்.
இம்மாதம் முதல் தேதியில் இருந்து, நேற்று வரை, 35 நாய்களுக்கு கருத்தடை செய்து உள்ளோம். இனிவரும் காலங்களில் வாரத்தில் ஒரு நாள், தெருவில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து கருத்தடை செய்யப்படும்.சொறி நாய்களை பிடித்து தனிஅறையில் அடைத்து வைக்கப்படும். நாய்களை பிடிப்பதற்கு, நகராட்சி நிதியில் இருந்து, இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்ய, நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.