தினத்தந்தி 11.07.2013
சேலம் மாநகரில் சுகாதாரமற்ற முறையில் சாலையோரத்தில் இறைச்சி விற்ற 2 கடைகள் அகற்றம் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
சாலையோரத்தில் இறைச்சி விற்ற 2 கடைகள் அகற்றப்பட்டன. இதற்கான நடவடிக்கையை
அதிகாரிகள் மேற்கொண்டனர்.
இறைச்சி கடைகள்
சேலம் மாநகராட்சியில் சாலையோரங்களில்
விற்கப்படும் ஆட்டு இறைச்சிகள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும், இந்த
கடைகளால் மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் மாநகராட்சி ஆணையாளருக்கு
புகார் வந்தது. இதையடுத்து சாலையோரங்களில் விற்கப்படும் இறைச்சி மற்றும்
மீன் கடைகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
அதன்படி நேற்று உணவு பாதுகாப்பு துறை
நியமன அலுவலர் அனுராதா, மாநகராட்சி நகர் நல அலுவலர்(பொறுப்பு) மலர்விழி,
அஸ்தம்பட்டி பகுதி உதவி ஆணையாளர் பிரித்தீ மற்றும் அதிகாரிகள் நேற்று
கோரிமேடு, அஸ்தம்பட்டி, சாரதா கல்லூரி சாலை, 5 ரோடு உள்பட பல்வேறு
பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
2 கடைகள் அகற்றம்
அப்போது, பல கடைகளில் போதிய சுகாதாரமற்ற
முறையில் இறைச்சிகளை விற்பது தெரியவந்து. மேலும் ஆடுகளை கடைகள் முன்பு
வெட்டப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடை உரிமையாளரிடம்
இறைச்சி வெட்டுவதற்காக சேலம் குகை, வ.உ.சி. மார்க்கெட் அருகில், மணியனூர்
ஆகிய இடங்களில் வதைக்கூடம் உள்ளது.
அங்கு சென்று தான் ஆடுகளை வெட்டி கொண்டு
வர வேண்டும் என்று கூறி எச்சரிக்கை செய்தனர். சேலம் 5 ரோடு ஸ்டேட் பாங்க்
காலனி பகுதியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது சாலையோரத்தில் இருந்த 2
இறைச்சி கடைகள் முன்பு ஆடு வெட்டப்பட்டது கண்டறியப்பட்டது.
எச்சரிக்கை
அப்போது, சுகாதாரமற்ற முறையில் இருந்த 2
கடைகளையும் உடனடியாக அகற்றப்பட்டன. இதுகுறித்து மாநகாராட்சி அதிகாரிகள்
கூறும் போது, ‘மாநகராட்சி பகுதியில் சாலையோரங்களில் ஆட்டு இறைச்சி மற்றும்
மீன் போன்றவற்றை விற்கக்கூடாது.
நிரந்தர கடைகளில் மட்டுமே விற்பனை செய்ய
வேண்டும். எனவே மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் ஆய்வு செய்யும் போது
சாலையோரங்களில் இறைச்சி, மீன் விற்பது கண்டறியப்பட்டால் அவைகளை
அகற்றப்பட்டு சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்று எச்சரிக்கை
விடுத்தனர்.