தினமணி 13.02.2014
அரசு மருத்துவமனையில் அம்மா உணவகம் திறப்பு:2 வேளை மலிவு விலை உணவு வழங்க ஏற்பாடு
தினமணி 13.02.2014
அரசு மருத்துவமனையில் அம்மா உணவகம் திறப்பு:2 வேளை மலிவு விலை உணவு வழங்க ஏற்பாடு
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அம்மா உணவகத்தை
காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை
திறந்துவைத்தார். இதையடுத்து மேயர் உள்ளிட்டோர் முதல் விற்பனையை
ஆரம்பித்துவைத்தனர். இதில் காலையில் இட்லியும், மதியம் சாம்பார், தயிர்
சாதமும் விற்கப்பட உள்ளது.
மதுரையில் மேலவாசல், புதூர் மாநகராட்சி மருத்துவமனை உள்ளிட்ட 10
இடங்களில் ஏற்கெனவே அம்மா உணவகம் செயல்பட்டுவருகிறது. இந்தநிலையில் ஏழை
நோயாளிகளும், பொதுமக்களும் பயன்படும் வகையில் அரசு மருத்துவமனையில் அம்மா
உணவகம் திறக்கவேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து கடந்த சில
மாதங்களுக்கு முன்பு அம்மா உணவகம் அமைப்பதற்கான நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் குழந்தைகள் நல சிகிச்சைப்
பிரிவுக்கு முன்புறம் ரூ.25 லட்சத்தில் அம்மா உணவகம் அமைக்கப்பட்டது. அதில்
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், காற்றோட்ட வசதி, சூரிய சக்தியில்
செயல்படும் வெந்நீர் அமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அம்மா உணவகத்தினை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்வர்
ஜெயலலிதா புதன்கிழமை மாலை திறந்துவைத்தார். இதையடுத்து மருத்துவமனை அம்மா
உணவகம் அருகே இருந்த பந்தலில் மாநகராட்சி மேயர் வி.ராஜன்செல்லப்பா அம்மா
உணவகத்தில் பதிக்கப்பட்ட கல்வெட்டைத் திறந்துவைத்தார். பின்னர் மேயர்,
ஆணையர் கிரண்குராலா, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர்
எஸ்.வடிவேல்முருகன், தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் (மார்க்சிஸ்ட்)
ரா.அண்ணாதுரை ஆகியோர் உணவகத்திற்குள் சென்று உணவருந்தி விற்பனையைத் தொடங்கி
வைத்தனர். நிகழ்ச்சியில் மண்டலத்தலைவர் சாலைமுத்து, நகர் நல அலுவலர்
யசோதாமணி, உதவி ஆணையர் தேவதாஸ், 36 வது வார்டு கவுன்சிலர்
ஆனந்தவள்ளிதங்கம், மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல் ஆகியோர்
கலந்துகொண்டனர்.
உணவகத்தில் காலையில் இட்லி (ரூ.1) மட்டும் விற்கப்படும். தினமும் 2400
இட்லிகள் விற்கப்படவுள்ளன. மதியம் சாம்பார் சாதம் (ரூ.5) 600 பேருக்கும்,
தயிர்சாதம் (ரூ.5) 300 பேருக்கும் அளிக்கப்படும். காலை, மதியம் 2 நேரம்
உணவகம் என தெரிவிக்கப்பட்டது.
மருத்துவமனைக்குள் திறக்கப்பட்ட அம்மா உணவகத்தில் முதல் நாளே ஏராளமான
நோயாளிகள் உறவினர்கள் உணவருந்தினர். இதனால் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.