தினமணி 12.11.2009
வைகை 2-வது குடிநீர்த் திட்டம் மதுரை மாநகராட்சிக்கு மு.க. ஸ்டாலின் பாராட்டு
மதுரை, நவ. 11: வைகை 2-வது கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றியமைக்காக தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் மதுரை மாநகராட்சி ஆணையர் எஸ். செபாஸ்டின், தலைமைப் பொறியாளர் சக்திவேல் மற்றும் அலுவலர்களைப் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.
மதுரை மாநகராட்சியின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின்கீழ் ரூ. 71.20 கோடி மதிப்பில் வைகை 2-வது கூட்டுக்குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இத்திட்டம் கடந்த அக். 24-ம் தேதி துவக்கிவைக்கப்பட்டது. இத்திட்டத்தில், வைகை அணையில் இருந்து மதுரை நகருக்கு 65 கி.மீ. நீளத்திற்கு நவீன தொழில்நுட்பத்துடன் மலைகளை குடைந்து, குழாய்கள் போடப்பட்டுள்ளன.
ஏற்கெனவே வழங்கப்பட்டுவரும் 68 மில்லியன் லிட்டர் குடிநீருடன் இத்திட்டத்தில் நாள்தோறும் கூடுதலாக 47 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மதுரை நகர மக்களுக்கு கிடைக்கும்.
இத்திட்டத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற்றியமைக்காக சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மதுரை மாநகராட்சி ஆணையர், முதன்மைப் பொறியாளர் மற்றும் அலுவலர்களுக்கு துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைச் செயலர் நிரஞ்சன்மார்டி, நகராட்சி நிர்வாக இயக்குநர் பி. செந்தில்குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.