தினமணி 22.01.2015
கழிவு நீரை சாலையில் விட்டவருக்கு ரூ.2ஆயிரம் அபராதம்
மதுரை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் புதன்கிழமை உதவி ஆணையர் அ.தேவதாஸ் தலைமையில் வட்டார சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வுப்பணி மேற்கொண்டனர்.
அப்போது, 98-ஆவது வார்டு ஜோசப் நகரில் கார்த்திகேயன் என்பவரது வீட்டிலிருந்து கழிவுநீர் சாலையில் ஓடிக்கொண்டிருந்தது. இப்பகுதியை ஆய்வு செய்த அலுவலர்கள், டெங்கு கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தியதாக, அவருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்ததாக, உதவி ஆணையாளர் தேவதாஸ் தெரிவித்தார். இவ்வாறு சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துவோருக்கு தொடர்ந்து அபராதம் விதிக்கப்படும் எனவும், அவர் தெரிவித்தார்.