தினகரன் 24.12.2009
2 தொகுதியில் பெயர் இருந்தால் கிரிமினல் நடவடிக்கை மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை
திருச்சி: இரு தொகுதிகளின் வாக்காளர் பட்டியலில் ஒரே பெயர் இருந்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி கமிஷ னர் பால்சாமி கூறினார்.
திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசரக் கூட்டம் மேயர் சுஜாதா தலைமையில், கமிஷனர் பால்சாமி, துணைமேயர் அன்பழகன் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
கமிஷனர் பேசுகையில், கடந்த 21ம் தேதி முதல் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. அந்தந்த பகுதி குடியிருப்பு சங்க பிரதிநிதிகள், என்எஸ்எஸ் போன்ற தன்னார்வ அமைப்புகள் மூலம் இந்த 100 சதவீத சரிபார்ப்பு பணி வீடுவீடாக நடந்து வருகிறது. ஏற்கனவே உள்ள பட்டியலில் இருந்து இடமாற்றம் போன்ற காரணத்தால் நீக்கப்பட்டவர்கள், புகைப்படம் மாறி இருத்தல், பெயரில் உள்ள குளறுபடிகள் போன்றவை இந்த பணியின் போது திருத்தம் செய்யப்படும்.
அதேபோல் 2 தொகுதிகளில் வாக்காளரின் பெயர் இருந்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது. அதனால் அரசியல் பாகுபாடின்றி இப்பணியை மேற்கொள்ள கவுன்சிலர்கள் ஒத்துழைக்க வேண்டும். தற்போது தயார் செய்யப்படும் பட்டியல்தான் வரும் காலங்களில் நடக்கும் அனைத்து தேர்தல்களிலும் பயன்படுத்தும் அளவிற்கு தாய் பட்டியலாக இருக்கும்.
1.1.2010ம் தேதியன்று 18 வயது பூர்த்தியானவர்கள் புதிதாக பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். இதர வாக் காளர்கள் பின்னர் அறிவிக்கப்படும் நாட்களில் விண்ணப்பங்களை பெற்று பெயர் சேர்க்கலாம். வரும் ஜனவரி 10 மற்றும் பிப்ரவரி 7ம் தேதிகளில் மாநகராட்சி சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது. 864 முகாம்கள் மூலம் 83 ஆயிரம் குழந்தைகளுக்கு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
மீண்டும் ஏலம் நீட்டிப்பு இல்லைமாநகராட்சியில் உள்ள அங்காடிகள், பேருந்து நிலையங்கள், சந்தைகள், மதிவண்டி நிறுத்தங்கள், கட்டண கழிப்பிடங்கள், தங்கும் விடுதிகள் போன்ற அனைத்து வகையான இனங்களிலும் கட்டணம் வசூலிக்கும் உரிமைக்கு ஒரு ஆண்டாக இருந்த குத்தகை காலத்தை 3 ஆண்டுகளுக்கு மாற்றி அமைக்க நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் உத்தரவு தொடர்பான பொருள் மீது விவாதம் நடந்தது. இந்த உத்தரவின் பேரில் 1.4.2010ம் தேதி முதல் 31.3.2013ம் ஆண்டு வரையிலான குத்தகை கட்டண விபரத்தை மாமன்ற பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து கவுன்சிலர் வெங்கட்ராஜ் பேசுகையில், ஏற்கனவே குத்தகை எடுத்திருப்பவர்களுக்குத்தான் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து தர வேண்டும். இல்லை என்றால் அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்று விடுவார்கள் என்றார்.
இதற்கு கமிஷனர் பால்சாமி பதில் கூறுகையில், அனைத்து நகராட்சி, மாநகராட்சிகளிலுமே 2010 & 2011ம் ஆண்டில் இருந்து, 3 ஆண்டிற்கு குத்தகை காலம் நிர்ணயம் செய்யப்பட்டு ஏலம் விடப்பட உள்ளது. இது தொடர்பாக சென்னையில் கருத்து கேட்டபோதும் இவ்வாறே கூறினார்கள். அதனால் ஏற்கனவே குத்தகை எடுத்தவர்களுக்கே மீண்டும் நீட்டித்து வழங்க இயலாது. கண்டிப்பாக 3 ஆண்டுகளுக்கான குத்தகை முறைக்கு ஏலம் விடப்படும். 2வது மற்றும் 3வது ஆண்டிற்கு 5 சதவீதம் கட்டணம் உயர்த்துதல் தொடர்பாக மாமன்றத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு முடிவு செய்யப்படும் என்றார்.