தினமணி 08.02.2010
2 லட்சம் குழந்தைகளுக்கு இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து வழங்கல்
திண்டுக்கல், பிப். 7: திண்டுக்கல் மாவட்டத்தில், இரண்டாம் கட்டமாக 2.1 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமை, ஞாயிற்றுக்கிழமை மாவட்ட ஆட்சியர் மா. வள்ளலார் தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 1,232 மையங்கள் மூலம் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 5,343 பணியாளர்கள் சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச் சத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், ஊராட்சி அலுவலகங்கள், ரயில் மற்றும் பஸ் நிலையங்கள், 25 நடமாடும் சொட்டு மருத்துவ முகாம்கள், 18 போக்குவரத்து முகாம்களிலும் சொட்டு மருந்துகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் அர. லட்சுமி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஜெகதீஸ்குமார், கோட்டாட்சியர் ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.