தினமணி 17.02.2010
மாநகராட்சி தேர்தல்: உச்ச நீதிமன்றத்தில் 2 கேவியட் மனுக்கள் தாக்கல்
பெங்களூர், பிப்.16: பெங்களூர் மாநகராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுவை தேர்தல் ஆணையமும், காங்கிரஸ் கட்சியும்
தாக்கல் செய்துள்ளன.
பெங்களூர் மாநகராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 30-க்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அத் தேர்தலுக்கான வார்டு இட ஒதுக்கீடு பட்டியலை பிப்ரவரி 20-ம் தேதிக்குள் அறிவித்து, பிப்ரவரி 22-ம் தேதி அந்தப் பட்டியலை மாநில தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைத்துவிட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் மாநகராட்சி தேர்தலை நடத்தும் சூழ்நிலையில் இப்போது மாநில அரசு இல்லை. எனவே, தேர்தலை சிறிது காலம் ஒத்திவைக்க அவகாசம் கோரியும் மே மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடித்துவிடுவதாகவும் கூறி சிறப்பு ரிட் அப்பீல் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அரசின் இந்த முடிவு இனியாவது தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்த்திருந்த எதிர்க்கட்சிகளுக்கு மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் காங்கிரஸ்
கட்சியைச் சேர்ந்த முன்னாள் மேயர்கள் ரமேஷ், ராமச்சந்திரப்பா, ஹுச்சப்பா, சி.ஆர்.சிம்மா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் “கேவியட்‘ மனு ஒன்றை கடந்த சனிக்கிழமை தாக்கல் செய்திருந்தனர்.
அதுபோல் கேவியட் மனு ஒன்றை மாநில தேர்தல் ஆணையமும் உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்துள்ளது. தேர்தலை ஒத்திவைக்க மாநில அரசு சிறப்பு
அப்பீல் மனு தாக்கல் செய்யும்பட்சத்தில் எங்களது கருத்தைக் கேட்காமல் எந்தவித உத்தரவையும் பிறப்பித்துவிடக் கூடாது என்பதை உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவர கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனவே, மாநகராட்சித் தேர்தலை ஒத்திவைக்க கால அவகாசம் கேட்டு மாநில அரசு சிறப்பு ரிட் அப்பீல் செய்யும்பட்சத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளவர்களிடமும், மாநில தேர்தல் ஆணையத்திடமும் கருத்துக்களை கேட்ட பிறகே மாநில அரசு மனு மீது உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும்.
இதற்கிடையே சிறப்பு ரிட் அப்பீல் மனுவை மாநில சட்டத்துறை தயாரித்துவிட்டது. அதில் உச்ச நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் வகையில் பலமான
ஆதாரங்களை மாநில அரசு சேர்த்துள்ளதாக தெரியவந்துள்ளது. மாநகராட்சி தேர்தலை
ஒத்திவைக்க கால அவகாசம் கோருவது ஏன் என்பதற்கு பல காரணங்களை மாநில அரசு தயார் படுத்தி வைத்துள்ளது.
குறிப்பாக பிப்ரவரி 26-ம் தேதி மாநில சட்டப்பேரவை கூட்டம் துவக்கம், மார்ச் 5-ம் தேதி மாநில பட்ஜெட் தாக்கல், மார்ச் மாதம் 26-ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுதல், மார்ச்–ஏப்ரல் மாதங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பியூசி இறுதித் தேர்வு ஆகியவை நடைபெறுதல் ஆகிய காரணங்களால் தேர்தலை நடத்த அவகாசம் வேண்டும். மே மாதத்தில் கண்டிப்பாக மாநகராட்சி தேர்தலை அரசு நடத்தி முடிக்கும் என்று உறுதி அளித்து மனு தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.