தினமலர் 16.04.2010
குடிநீர் பிரச்னையை போக்க ரூ. 2 கோடி நிதி : வீடியோ கான்பரன்ஸில் ஸ்ரீபதி தகவல்
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க ரூ. 2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என்று தலைமை செயலாளர் ஸ்ரீபதி கூறியுள்ளார். வேலூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையை தீர்ப்பது தொடர்பான வீடியோ கான்பரன்ஸ் ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. தமிழக தலைமை செயலாளர் ஸ்ரீபதி, வருவாய் நிர்வாக ஆணையாளர் சுந்தரதேவன் ஆகியோர், கலெக்டர் ராஜேந்திரனுடன் குடிநீர் பிரச்னை குறித்து ஆய்வு செய்தனர். அப்போது ‘வேலூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னை எந்த நிலையில் உள்ளது?’ என்று ஸ்ரீபதி கேள்வி எழுப்பினார். இதற்கு, ‘வேலூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையை சமாளிக்க இதுவரை ரூ. 6 கோடியே 15 லட்சம் செலவிடப்பட்டு, பல பணிகள் நடந்து வருகிறது. குடிநீருக்கு பாலாற்றை மட்டுமே வேலூர் மாவட்டம் உள்ளது. பாலாற்றில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து உள்ளது. மேலும், மாவட்டத்தில் பெரும்பாலான திறந்தவெளி கிணறு போன்ற நீராதாரங்களும் வறண்டு போய் உள்ளது‘ என்று கலெக்டர் கூறினார்.இதற்கு பதிலளித்த ஸ்ரீபதி, ‘வேலூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க ரூ. 2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி, எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அனுப்ப வேண்டும்‘ என்றார். வீடியோ கான்பரன்ஸ் ஆய்வுக் கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சரவணவேல்ராஜ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அருள்ஜோதி அரசன், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் செரீப் உட்பட பலர் கலந்து கொண்டனர். வேலூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையை சமாளிக்க ரூ. 27 கோடி நிதியை கேட்டு மாவட்ட நிர்வாகம் கடந்த மாதம் அரசுக்கு அறிக்கை அனுப்பி இருந்தது. இருந்த போதிலும் வேலூர் மாவட்டத்துக்கு இப்போது ரூ. 2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.