தினமலர் 21.04.2010
தாந்தோணியில் குடிநீரில் சாக்கடை கழிவு கலப்பு 2 நாளில் தீர்வு; நகராட்சி தலைவர் உறுதி
கரூர்: தாந்தோணி நகராட்சிக்கு உட்பட்ட எட்டாவது வார்டு காமராஜர் நகர் பகுதியில் வினியோகம் செய்யப்பட்ட குடிநீரில் சாக்கடை நீர் கலந்துவந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தாந்தோணி நகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகர் இரண்டாவது தெருவில் 200க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் கடந்த மூன்று மாதமாக 10 நாட்களுக்கு ஒருமுறை இரண்டு மணி நேரம் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இப்பகுதிக்கு செல்வாநகர் பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியிலிருந்து தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது கடந்த இரண்டு மாதமாக நகராட்சியால் வழங்கப்படும் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருகிறது. இரண்டு மணி நேரம் வரும் தண்ணீரில் சுமார் ஒரு மணி நேரம் துர்நாற்றத்துடன் தண்ணீர் வருகிறது. கவுன்சிலர் ராதா முறையிட்டதை தொடர்ந்து நகராட்சி குடிநீர் வழங்கும் அலுவலர்கள் ‘எந்த இடத்தில் சாக்கடை கலக்கிறது?’ என ஆய்வு செய்தனர். சரியாக பிரச்னைக்கு உரிய இடம் கண்டுபிடிக்க முடியாமல் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், பகுதி மக்கள் குடிநீருக்காக பல்வேறு இடங்களுக்கு சென்றும், லாரி மூலம் வாங்கியும் பயன்படுத்தும் நிலை உள்ளது.
இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் குடிநீர் வடிகால் வாரிய பணியாளர் காசி மற்றும் பகுதியில் வசிக்கும் அமுதா, ராஜேஸ்வரி, காமாட்சி, செல்வி ஆகியோர் கூறியதாவது: குடிநீரில் கழிவு நீர் கலப்பது குறித்து பலமுறை நகராட்சி கவுன்சிலரிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் பகுதிக்கு மட்டும் வழங்கப்படும் தண்ணீரில் தான் சாக்கடை கழிவு கலந்து வருகிறது. எந்த பகுதியில் சாக்கடை கலக்கிறது என்று அதிகாரிகளால் கண்டுபிடிக்கமுடியவில்லை. நாங்கள் வெளியே செல்லும் வேளையில் தண்ணீர் வந்தால், நேரடியாக நிலத்தின் மட்டத்தில் உள்ள தொட்டியில் தண்ணீர் நிரம்பும் வகையில் வைத்து செல்வது வழக்கம். இவ்வாறு செய்தால், தொட்டியில் ஏற்கனவே உள்ள நீருடன் கழவு நீர் கலந்து மொத்தமாக தொட்டியே சுத்தப்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறோம். உடனடியாக நகராட்சி நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
நகராட்சி தலைவர் ரேவதி கூறியதாவது: காமராஜ் நகர் பகுதியில் குடிநீர் கலங்கலாக வருவது குறித்து புகாரின் பேரில் அலுவலர்கள், சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை தண்ணீர் செல்லும் குழாய் ஒன்றை சோதிக்க, சந்தேகத்துக்கு இடமான குழாயை அடைத்துவிட்டு மாற்று குழாய் மூலம் தண்ணீர் சப்ளை செய்து ஊழியர்கள் சோதித்துள்ளனர். அப்போதும் கலங்கலான தண்ணீர் குழாயில் சென்றுள்ளதால்நேற்றும் புகார் தெரிவித்துள்ளனர். நேற்று காலை முதல், ஒவ்வொரு குழாய் இணைப்பாக ஊழியர்கள் தொடர்ந்து சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு ‘கேட் வால்வுக்கு‘ 40 இணைப்புகள் உள்ளதால், எந்த இணைப்பில் கழிவு நீர் கலக்கிறது என்று ஒவ்வொன்றாகத்தான் சோதிக்க வேண்டியுள்ளது. இரண்டு நாட்களுக்குள் அனைத்து இணைப்பையும் சோதித்து பிரச்னைக்கு தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.