தினமலர் 30.04.2010
எப்போது முடியும் 2வது நீர் திட்டம்?தடையில்லா வினியோகத்துக்கு ஆவல்
கூடலூர்:கூடலூர் நகரில் தொடரும் நீர் பிரச்னைக்கு தீர்வு காண, இரண்டாவது திட்டப் பணிகளை விரைவாக முடித்தால், தடையின்றி நீர் கிடைக்க ஏதுவாகும்.கூடலூர் நகராட்சிப் பகுதி மக்களுக்கு, ஹெலன் நீர் திட்டம் மூலம், கடந்த பல ஆண்டுகளாக வினியோகிக்கப்படுகிறது. நகரின் வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை அதிகரிப்பால், திட்டம் மூலம் வினியோகிக்கப்படும் நீரில் பற்றாக்குறை ஏற்பட்டது. இதைப் போக்க, நகராட்சி மூலம் சில பகுதிகளில் கிணறு அமைத்து நீர் வழங்கப்பட்டது. ஆனால், போதிய பராமரிப்பு இல்லாதது, கோடையில் பற்றாக்குறை ஏற்படுவது போன்ற காரணங்களால், கிணற்றிலிருந்து நீர் கிடைக்காமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.நிரந்தர தீர்வு காண, புதிய நீர் திட்டத்தை செயல்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இதையேற்று, கோழிக்கோடு சாலை இரும்புபாலம் பகுதியில், பாண்டியார் – புன்னம்புழா ஆற்றின் கரையோரம் ராட்சத கிணறு அமைத்து 2வது நீர் திட்டம் மூலம் மக்களுக்கு வினியோகிப்பது குறித்து, நகராட்சி சார்பில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டது.
திட்டத்துக்கு, சில ஆண்டுகளுக்கு முன் 5.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. நிதி ஒதுக்கப்பட்டாலும், கிணறு அமைக்க, இரும்புபாலம் பகுதியில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் வனத்துறை அனுமதி கிடைப்பதிலும், சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, கோழிப்பாலத்தில் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு சொந்தமான இடத்தை, தனியார் வசமிருந்து மீட்பதிலும் சிக்கல் ஏற்பட்டது; இதனால், பணிகள் உடனடியாக துவங்கவில்லை.இழுபறிக்கு பின் சிக்கல் தீர்க்கப்பட்டு, கடந்தாண்டு திட்டப் பணிகள் துவங்கின. மார்ச் மாதத்துக்குள் பணிகள் முடிந்து, நீர் வினியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்; ஆனால், பணிகள் இதுவரை முழுமை பெறவில்லை. எனவே, நீர் திட்டப் பணிகளை விரைவில் முடித்து, தடையின்றி நீர் வினியோகிக்க மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.