தினமலர் 18.05.2010
கொக்கிரகுளம், வண்ணார்பேட்டைக்கு இரவு 2 மணிக்கு மாநகராட்சி குடிநீர் : கூட்டத்தில் திமுக கவுன்சிலர் புகார்
திருநெல்வேலி : கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை பகுதிக்கு அதிகாலை 2 மணிக்கு குடிநீர் வருவதாகவும், வாட்டர் டேங்கில் முழுமையாக குடிநீர் ஏற்றப்படாததால் மக்களுக்கு தண்ணீர் சீராக கிடைப்பதில்லை எனவும் மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர் கந்தன் புகார் கூறினார்.
நெல்லை மாநகராட்சி சாதாரண மற்றும் அவசர கூட்டம் மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. கமிஷனர் (பொ) ஜெய்சேவியர், துணைமேயர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:
முருகன்: நெல்லையில் நாய் தொல்லைகள் அதிகமாக உள்ளது. அதை கட்டுப்படுத்தவேண்டும்.
மேயர்: மிருக வதை தடைச்சட்டம் உள்ளது. எனவே நாயை கொல்ல முடியாது. கருத்தடை செய்து நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து ஒரு குழு வரவழைக்கப்பட்டு பன்றிகள் பிடிக்கப்பட்டுள்ளன.
சுதா பரமசிவன்: நெல்லை மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் கடைகளில் ரெய்டு நடத்தி காலவதியான பொருட்களை பறிமுதல் செய்துவருகின்றனர். இதில் தவறு இல்லை. எந்த அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. ஜங்ஷன் பஸ்ஸ்டாண்டில் 2 கடைகள் பூட்டியே உள்ளன. இதனால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
உமாபதிசிவன்: துப்புரவு பணியாளர் பற்றாக்குறை இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இந்த மாதம் 16 பேர் ஓய்வு பெறுகின்றனர். கருணை அடிப்படையிலான பணி நியமனம் என்னாச்சு.
வெங்கடேசன்: முதியோர் உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்தால் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள பட்டியலில் பெயர் இல்லை என கூறிவிடுகின்றனர். மாநகராட்சி கவுன்சிலர் பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றி அதை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பலாமா.
பேபிகோபால்: வ.உ.சி.மைதானத்தில் ரூ.10 லட்சம் செலவில் நடைபாதை அமைக்கும் பணி அமைச்சர் துவக்கிவைத்தார். ஆனால் இன்று வரை பணிகள் நடைபெறவில்லை. அந்த பணியை துவக்கவேண்டும். வ.உ.சி.மைதானத்தை மீண்டும் மாநகராட்சிக்கே கொண்டு வரும் தீர்மானத்தை நிறைவேற்றவேண்டும்.
மேயர்: பொதுப்பணித்துறையினர் முறையான வரைபடத்துடன் அனுமதி கேட்டால் அனுமதிக்கலாம். வ.உ.சி.மைதானம் எப்படி விளையாட்டு துறைக்கு போனது என்பது குறித்து பைல்களை எடுக்க சொல்லியுள்ளேன். அதை பார்த்துவிட்டு தான் தீர்மானம் போட முடியும்.
பிரான்ஸிஸ்: கே.டி.சி.நகர் குடிநீர் திட்டத்தில் முறைகேடாக இணைப்பு எடுத்ததாக புகார் எழுந்தது. தற்போது பணம் செலுத்தியவர்களுக்கு ஏன் இணைப்பு கொடுக்கவில்லை.
மேயர்: கோடை காலம் முடிவதற்குள் இணைப்பு கொடுக்க பணிகள் துரிதப்படுத்தப்படும்.
வேல்முருகன்: எனது வார்டில் பகிர்மான குழாய் அமைக்கப்படாததால் குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர். மின் கம்பங்களில் மின் இணைப்பு கொடுக்கப்படாமல் உள்ளது.
அதிகாரி: விரைவில் குடிநீர் இணைப்பு வழங்கவும், மின் கம்பங்களில் மின் விளக்கு வசதி செய்யப்படும்.
பேபிகோபால்: எம்.எல்.ஏக்களுக்கு வீட்டு மனை வழங்குவது போல் கவுன்சிலர்களுக்கும் வழங்கவேண்டும்.
சுப.சீத்தாராமன்: கவுன்சிலர்களுக்கு வீட்டு மனை வழங்கலாம் என அரசு உத்தரவு உள்ளது.
கந்தன்: கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை பகுதிக்கு இரவு 2 மணிக்கும், 3 மணிக்கும் தண்ணீர் வருகிறது. தண்ணீரும் முழுமையாக வாட்டர் டேங்கில் ஏற்றப்படாதால் மக்களுக்கு சரிவர கிடைப்பதில்லை.
மேயர்: டேங்கில் முழுமையாக தண்ணீர் ஏற்றி மக்களுக்கு வழங்கப்படும்.
சுப.சீத்தாராமன்: மாநகராட்சியில் மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடத்தை நிரந்தரமாக்கவேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் பி.ஆர்.ஓவால் மாநகராட்சிக்கு எந்த பயனும் இல்லை. பணம் மட்டுமே கூடுலாக செலவாகிறது. பி.ஆர்.ஓவை கவுன்சிலர்கள் யாருக்கும் தெரியாது. எனவே அந்த பணியிடம் நெல்லை மாநகராட்சிக்கு தேவையில்லாதது.
சைபுன்னிஷா: மாநகராட்சி பி.ஆர்.ஓ.பணியிடம் தேவையில்லை.
மேயர்: இதுகுறித்து கலந்து பேசி அடுத்த கூட்டத்தில் முடிவு செய்வோம்.
சுதா பரமசிவன்: புதுபஸ்ஸ்டாண்டு வாகன காப்பகத்திற்கு ரூ.64 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணம் மேயர் ஒப்புதலுடன் செலவிடப்பட்டதா. கமிஷனர் தன்னிச்சையாக முடிவு செய்தாரா.
மேயர்: புதிய பஸ்ஸ்டாண்டு வாகன காப்பகம் தனியாரிடம் இருந்து மாநகராட்சி வசம் வந்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் தனியாரிடம் இருந்து ரூ.1.24 கோடி மட்டுமே வருவாய் வந்துள்ளது. சராசரியாக ஆண்டுக்கு ரூ.17 லட்சம் மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது. யாரும் ஏலம் கேட்காததால் இரண்டு முறை ஏலம் விடப்பட்டது. கடந்த ஆண்டு எடுத்த தொகையை விட குறைவாக ஏலம் கேட்டதால் மாநகராட்சி வசம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்கு செலவு செய்த பணம் எனது ஒப்புதலுடன் தான் கமிஷனர் செலவு செய்தார். இதன் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.45 லட்சம் வருவாய் வரும். நெல்லை மாநகராட்சியின் இந்த செயல்பாட்டை பார்த்து மற்ற பகுதிகளிலும் இந்த திட்டத்தை அமல்படுத்துவது குறித்து விளக்கத்தை அரசு கேட்டுள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.