தினமலர் 25.05.2010
கார்பைட்‘கல் வைத்து பழுத்த 2 டன் மாம்பழங்கள் பறிமுதல்
தர்மபுரி: தர்மபுரியில் ரசாயன கல் வைத்து பழுத்த இரண்டு டன் மாம்பழங்களை நகராட்சி சுகாதார பிரிவினர் பறிமுதல் செய்தனர். தர்மபுரி நகரில் உள்ள மாங்காய் மண்டிகளில் “கார்பைட்‘ எனப்படும் ரசாயன கல் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைத்து விற்பனை செய்வதாக நகராட்சி சுகாதார பிரிவுக்கு புகார்கள் வந்தன. “கார்பைட்‘ கல் வைத்து பழுக்க வைக்கப்படும் பழங்களை சாப்பிடுவோருக்கு வயிற்று போக்கு, வயிற்று வலி உள்ளிட்ட நோய்கள் வரும் வாய்ப்புள்ளது.
புகாரை தொடர்ந்து நகராட்சி கமிஷனர் அண்ணாதுரை, துப்புரவு அலுவலர் தங்கராஜ், சுகாதார ஆய்வாளர் முனிராஜ் ஆகியோர் தலைமையில் நகராட்சி சுகாதார பிரிவினர் தர்மபுரி டேக்கிஷ்பேட்டை பகுதியில் உள்ள மாங்காய் மண்டிகளில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நான்கு மாங்காய் மண்டிகளில் ரசாயன கல் வைத்து மாங்காய் பழுக்க வைத்து விற்பனை செய்தது தெரிந்தது. நான்கு கடைகளில் இருந்து இரண்டு டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. “ரசாயன கல் வைத்து பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்‘ என நகராட்சி சுகாதார பிரிவினர் மாங்காய் மண்டிகளில் எச்சரிக்கை செய்தனர்..