தினமணி 16.09.2009
வைகை 2-வது குடிநீர்த் திட்டத்தின்கீழ் ‘புதிய இணைப்புகள் பெற விண்ணப்பிக்கலாம்’
மதுரை, செப். 15: மதுரை மாநகராட்சியில் வைகை 2-வது குடிநீர்த் திட்டத்தில் மாநகராட்சி விரிவாக்கப் பகுதிகள் மற்றும் விடுபட்ட பகுதிகளில் குடிநீர்க் குழாய் அமைக்கும் பணிகள் முடிவுற்று இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
எனவே, புதிய குடிநீர் இணைப்பு பெற விரும்புவோர் விண்ணப்பிக்குமாறு மாநகராட்சி ஆணையர் எஸ். செபாஸ்டின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதிய குடிநீர் இணைப்பு பெற விரும்புவோர் நடப்பாண்டு வரை வீட்டுவரி செலுத்தியதற்கான ரசீதின் நகலை விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டும்.
குடிநீர் இணைப்புக்கு, வைப்புத் தொகையாக வீட்டு உபயோக இணைப்புக்கு ரூ. 3 ஆயிரம், வீட்டு இணைப்பு அல்லாத பிற இணைப்புகளுக்கு ரூ. 10 ஆயிரம் மாநகராட்சி கருவூலத்தில் செலுத்தி ரசீது நகல் இணைக்கப்பட வேண்டும்.
மேலும், மதிப்பீட்டுடன் சாலை சீரமைப்புக் கட்டணம் மற்றும் மேற்பார்வைக் கட்டணம் அந்தந்த இடத்துக்கு தகுந்தாற்போல் அலுவலகத்தில் தெரிவிக்கும் தொகையை மாநகராட்சி கருவூலத்தில் செலுத்தவேண்டும்.
குடிநீர் இணைப்பு பெறத் தேவையான அனைத்து பைப் மற்றும் தளவாட சாமான்களை விண்ணப்பதாரரின் சொந்த செலவில் வாங்கி உபயோகித்துக் கொள்ளவேண்டும்.
மதிப்பீட்டுத் தொகையை (சாலை சீரமைப்புக் கட்டணம் மற்றும் மேற்பார்வைக் கட்டணம்) செலுத்தி 7 தினங்களுக்குள் புதிய இணைப்பு வழங்கப்படும்.
இதுதவிர தேவையான இதர விவரங்களை அலுவலக வேலை நாட்களில் மண்டலப் பொறியியல் பிரிவில் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
மாநகராட்சிப் பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை சீர்செய்ய இருப்பதால், பொதுமக்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்திக் கொண்டு, குடிநீர் இணைப்புகள்பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மேலும், சாலை சீரமைப்புப் பணிகள் முடிந்த பின்பு குடிநீர் இணைப்பு வழங்கப்படமாட்டாது என்றார் ஆணையர் செபாஸ்டின்.