தினமலர் 10.06.2010
கோவில் குளம் சீரமைப்பு : ரூ.2 லட்சத்தில் பணி துவக்கம்
கூடலூர் : கூடலூர் நம்பாலக்கோட்டை வேட்டைகொருமகன் கோவிலுக்கு சொந்தமான பழமையான குளம், ரூ.2 லட்சம் மதிப்பில் தூர்வாரி சீரமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. கூடலூர் அடுத்துள்ள வேட்டைகொருமகன் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது; கோவிலுக்கு சொந்தமான குளம், கோவிலிருந்து 200 மீ., தொலைவில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன், இந்த குளத்தில் பக்தர்கள் நீராடி கோவிலுக்கு செல்வது வழக்கம்; உடை மாற்ற, நிழல் மண்டபமும் இருந்துள்ளது. காலப்போக்கில் குளம் பராமரிக்காமல் விடப்பட்டது. குளத்தை தூர் வாரி சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். நீண்டகால வலியுறுத்தலுக்கு பின், குளத்தை தூர் வாரி சீரமைத்து, கழிவுநீர் கலக்காதவாறு தடுப்பு அமைக்க, மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம், சுற்றுலா வளர்ச்சி துறை சார்பில் 2 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது, தேவர்சோலை பேரூராட்சி சார்பில் குளம் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன; இது, பக்தர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.