தினமணி 21.06.2013
தினமணி 21.06.2013
நொளம்பூர், காரப்பாக்கத்தில் 2 ஆண்டுகளில் 7,500 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு
சென்னை பெருநகர திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட
நிதியின் மூலம் நொளம்பூர், காரப்பாக்கம் பகுதிகளில் 2 ஆண்டுகளுக்குள் 7500
வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.
இது குறித்து குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் பி.சந்திரமோகன் வெளியிட்ட செய்தி:
சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளான நொளம்பூர்,
ஈஞ்சம்பாக்கம், சோழிங்கநல்லூர், காரப்பாக்கம், ராமாபுரம், நந்தம்பாக்கம்,
ஒக்கியம்-துரைப்பாக்கம், மணப்பாக்கம் ஆகிய இடங்களில் குடிநீர் திட்டம்
மற்றும் கத்திவாக்கம், சோழிங்நல்லூர், காரப்பாக்கம், ராமாபுரம் ஆகிய
இடங்களில் கழிவுநீர் திட்டங்களுக்காக ரூ. 452.77 கோடி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நொளம்பூர் மற்றும்
காரப்பாக்கத்தில் குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தம்
கோரப்பட்டுள்ளது. 24,506 பேர் வசிக்கும் நொளம்பூர் பகுதியில் குடிநீர்
திட்டப் பணிகளுக்காக 40 ஆயிரத்து 279 மீட்டர் நீளத்துக்கு குழாய்கள்
பதிக்கப்பட உள்ளன. 18 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி
கட்டப்பட உள்ளது. இப்பகுதியில் 2959 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு
வழங்கப்பட உள்ளது.
24,724 பேர் வசிக்கும் காரப்பாக்கத்தில் 47 ஆயிரத்து 401 மீட்டர்
நீளத்திற்கு குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட உள்ளன. 25 லட்சம் லிட்டர்
கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி மற்றும் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட
கீழ்நிலைத் தொட்டிகள் கட்டப்பட உள்ளன. இப்பகுதியில் 4568 வீடுகளுக்கு
குடிநீர் இணைப்பு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ரூ.31.97 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் இப்பணிகள் மூலம் 49
ஆயிரத்து 230 பேர் பயனடைவர். இன்னும் இரண்டு ஆண்டுகளில் திட்டப்பணிகள்
நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.