தினமணி 3.11.2009
இந்திரா நகரில் ரூ. 2 கோடியில் புதிய பாலம்
சென்னை, நவ. 2: சென்னை அடையாறு இந்திரா நகர் –தரமணி ராஜீவ்காந்தி சாலையை இணைக்கும் பாலம், ரூ. 2 கோடியில் புதிதாகக் கட்டப்படும் என்று மேயர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை அடையாறு இந்திரா நகரையும்,தரமணி ராஜீவ்காந்தி சாலையையும் இணைக்கும் வகையில் இரும்புப் பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. பாதசாரிகளின் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டிருந்த இந்த பாலத்தை, பொதுமக்களும், இருசக்கர வாகன ஓட்டிகளும் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு திருவண்ணாமலையிலிருந்து செங்கற்களை ஏற்றிவந்த லாரி, தடையை மீறி அந்த பாலத்தில் சென்றது. இதனால் பாரம் தாங்க முடியாமல் பாலம் இடிந்து விழுந்தது.
சேதமடைந்த பாலத்தை மேயர் மா. சுப்பிரமணியன் திங்கள்கிழமை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், “இடிந்து விழுந்துள்ள பாலம் ரூ. 2 கோடியில் விரைவில் புதிதாகக் கட்டப்படும். 60 அடி அகலமும், 150 அடி நீளமும் கொண்ட நான்கு வழிப் பாதையாக இந்தப் பாலம் அமைக்கப்படும். கவுன்சிலில் ஒப்புதல் பெற்றவுடன், உடனடியாக பாலம் கட்டும் பணி தொடங்கும். தடையை மீறிய லாரி டிரைவர் மீது, மாநகராட்சி செயற்பொறியாளர் மூலம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது‘ என்றார்.