தினகரன் 07.09.2010
ரூ2 லட்சம் செலவில் சிறுவர் பூங்கா சீரமைப்பு தினகரன் செய்தி எதிரொலி
தாம்பரம், செப். 7: தினகரன் செய்தி எதிரொலியாக, ரூ2 லட்சம் செலவில் குரோம்பேட்டை சிறுவர் பூங்கா சீரமைக்கப்படுகிறது. பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட குரோம்பேட்டை 35வது வார்டு சீனிவாச நகர் 3வது குறுக்கு தெருவில் 2 கிரவுண்ட் பரப்பளவில் சிறுவர் பூங்கா உள்ளது. அப்பகுதியை சேர்ந்த பொதுநல சங்கத்தினர் தங்கள் சொந்த செலவில் இந்த பூங்காவை அமைத்தனர். இதில், சிறுவர்கள் விளையாடி மகிழ ஊஞ்சல், சறுக்கு, கிளிகூண்டு உள்ளிட்ட உபகரணங்கள் இருந்தது.
சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த ஏராளமான சிறுவர்கள் மாலை நேரங்களில் இப்பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர். நகராட்சி நிர்வாகம் இந்த பூங்காவை சரியாக பராமரிக்காததால், பூங்காவில் இருந்த விளையாட்டு சாதனங்கள் பெயர்ந்து சேதமடைந்தன.
பூங்காவில் குப்பை தேங்கி கிடக்கிறது. வீடுகளின் கட்டுமான கழிவுகளும் கொட்டப்படுகின்றன. இது குறித்து, தினகரன் நாளிதழில் கடந்த 3ம் தேதி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, ரூ2 லட்சம் செலவில் சிறுவர் பூங்கா சீரமைக்கப்பட உள்ளது. சுற்றுச்சுவர், பொதுமக்கள் வாக்கிங் செல்ல நடைபாதை அமைக்கப்படுகிறது. உடைந்து கிடக்கும் விளையாட்டு உபகரணங்கள் சரிசெய்யப்பட உள்ளது என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.