தினமலர் 14.10.2010
அத்திக்கடவு 2வது திட்டம் பங்களிப்பு தொகை திரட்ட, பொதுமக்களிடம் டெபாசிட் வசூலிப்புபல்லடம்: அத்திக்கடவு இரண்டாவது குடிநீர் திட்டத்துக்கு பங்களிப்பு தொகை தேவைப்படுவதால், பொதுமக்களிடம் “டெபாசிட்‘ பெறுவதில் நகராட்சி நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது. பல்லடம் நகராட்சியில் 3,507 குடிநீர் இணைப்புகள் உள்ளன. புதிதாக குடிநீர் இணைப்பு கோருபவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. நேற்று மாலை வரை 2,370 பேர், வங்கிகளில் “டெபாசிட்‘ செலுத்தி சீனியாரிட்டி எண் பெற்றுள்ளனர். தொடர்ந்து பலர் விண்ணப்பம் செய்து வருகின்றனர். சீனியாரிட்டி அடிப்படையில், தினமும் 50 பேருக்கு, விதிமுறைப்படி, குடிநீர் குழாய் பொருத்திக் கொள்வதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாகம் வழங்குகிறது. மெயின் குழாய் அருகே இணைப்பு இல்லாதவர்களுக்கு மெயின் குழாய் வரை நகராட்சி நிர்வாகமே குழாய் அமைத்துக் கொடுக்கிறது. உத்தரவு பெற்றவர்கள், குழாய்களை பிளம்பர்கள் மூலம் பொருத்தி விட்டு நகராட்சிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். நகராட்சி ஊழியர்கள் ஆய்வு செய்து, உடனடியாக அத்திக்கடவு மெயின் குழாயில் இருந்து இணைப்பு கொடுக்க உள்ளனர் .
நகராட்சி அலுவலர்கள் கூறியதாவது:
தமிழக அரசு உத்தரவுப்படி, புதிய குடிநீர் இணைப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். வீட்டு இணைப்புக்கு ரூ.7,000, வர்த்தக இணைப்புக்கு ரூ.10,000, தொழிற்சாலைக்கு ரூ.15 ஆயிரம் டெபாசிட் பெறப்படுகிறது. தற்போது தினமும் 18.50 லட்சம் லிட்டர் அத்திக்கடவு குடிநீர் வருகிறது. ஏழு மேல்நிலைத் தொட்டிகள் மூலம் மூன்று நாளைக்கு ஒரு முறை குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இரண்டு மணி நேரம் தண்ணீர் கிடைக்கிறது. புதிதாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டாலும், தற்போதுள்ள 18.50 லிட்டர் தண்ணீரே பழைய இணைப்புதாரர்கள் மற்றும் புதிய இணைப்புதாரர்கள் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். இதன் மூலம் முன்பு இரண்டு மணி நேரம் வந்த தண்ணீர் நேரம் மட்டுமே சிறிது குறையும். அத்திக்கடவு இரண்டாவது குடிநீர் திட்டம், துவங்கியதில் இருந்து ஒன்றரை ஆண்டுக்குள் நிறைவு பெறும். இத்திட்டம் நிறைவு பெற்றால் தினமும் 70 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும். தற்போது பயன்பாட்டில் உள்ள ஏழு மேல்நிலை தொட்டிகளுடன் சி.டி.சி., காலனி, மேற்கு பல்லடம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள தலா இரண்டு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டிகளிலும் அத்திக்கடவு குடிநீர் ஏற்றப்பட்டு, வினியோகிக்கப்படும். இரண்டாவது குடிநீர் திட்டத்துக்கு நகராட்சி பங்களிப்பு தொகை தேவைப்படுவதால் பொதுமக்களிடம் “டெபாசிட்‘ பெறுவதில் முனைப்பு காட்டி வருகிறோம்.இவ்வாறு, நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.