தினமலர் 12.05.2010
தூத்துக்குடி பழைய பஸ் ஸ்டாண்டில் ஹாயாக புகை பிடித்த 20 பேர் சிக்கினர் : ஒருவருக்கு 100 ரூபாய் அபராதம் விதித்து அதிரடி
தூத்துக்குடி: தூத்துக்குடி பழைய பஸ் ஸ்டாண்டில் மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் நேற்று திடீரென நடத்திய சோதனையில் ஹாயாக புகை பிடித்துக் கொண்டிருந்த 20 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து 2 ஆயிரம் ரூபாய் உடனடியாக அபராதம் வசூல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தற்போது சுகாதாரத்தை சிறப்பாக பேணும் வகையில் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே இறைச்சி கடைகள் அதிரடி சோதனை செய்யப்பட்டது. தற்போது ஓட்டல்கள் முதல் பலசரக்கு கடைகள் வரை மக்களுக்கு தரமான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று அதிரடி சோதனை செய்யப்பட்டது. இதில் காலாவதியான மற்றும் தயாரிப்பு தேதி இல்லாத பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
ஏற்கனவே முக்கிய இடங்களில் புகைப்பிடித்தால் நூறு ரூபாய் அபராதம் விதிக்கும் சட்டம் அமலில் இருந்து வருகிறது. நேற்று காலை தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் குபேந்திரன் உத்தரவின் பேரில் மாநகராட்சி சுகாதார அதிகாரி (பொ) திருமால்சாமி அறிவுரையின் பேரில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் செல்வஜெயபாண்டி, ஸ்டாலின் பாக்கியநாதன் தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர்கள் ராஜசேகர், கருப்பசாமி, சதாசிவம் மற்றும் தனியார் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் போலீசார் உதவியுடன் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.ஒரே நேரத்தில் ஒட்டு மொத்தமாக பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியை சுகாதார அதிகாரிகள் குழு ற்றுகையிட்டனர். அப்போது புகைபிடிக்க தடை செய்யப்பட்ட பகுதியான பழைய பஸ் ஸ்டாண்டில் ஹாயாக நின்று புகைப்பிடித்து கொண்டிருந்த 20 பேரை சுகாதாரத்துறையினர் பிடித்தனர். கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், கிராம விவசாயிகள் என்று பல தரப்பினர் இதில் அடங்குவர்.
பொது இடங்களில் புகைப்பிடிக்க கூடாது என்று சட்டம் உள்ளது. சட்டத்தை மீறி நீங்கள் புகைப்பிடித்துள்ளீர்கள். இனிமேல் இதுபோன்ற தவறை செய்யக் கூடாது என்று சுகாதாரத்துறையினர் எச்சரித்தனர்.பின்னர் பிடிபட்ட ஒவ்வொருவரிடம் இருந்து தலா 100 ரூபாய் வீதம் அபராத தொகையை வசூல் செய்தனர். மொத்தம் 2 ஆயிரம் ரூபாய் அதிரடி வசூல் செய்யப்பட்டது. அபராதம் விதிக்கப்பட்டவர்களுக்கு மாநகராட்சி சார்பில் ரசீதும் வழங்கப்பட்டது.பிடிபட்ட கல்லூரி மாணவர் ஒருவர் கண் கலங்கிய நிலையில் இனிமேல் நான் புகைப்பிடிக்க மாட்டேன் என்று சுகாதார அதிகாரிகளிடம் சபதம் செய்ததாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.தூத்துக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் திடீர், திடீரென தொடர்ந்து அதிரடி சோதனை நடத்தப்படும். இதனால் தடை செய்யப்பட்ட இடங்களில் யாரும் புகைப்பிடிக்க வேண்டாம் என்று மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.