தினமணி 19.02.2010
20 லட்சம் பேருக்கு யானைக் கால் நோய்த் தடுப்பு மாத்திரைகள்
தஞ்சாவூர், பிப். 18: தஞ்சாவூர் மாவட்டத்தில் பிப்ரவரி 28-ம் தேதி 20 லட்சம் பேருக்கு யானைக் கால் நோய்த் தடுப்பு மாத்திரைகள் வழங்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் (பொ) மு. கருணாகரன்.
தஞ்சாவூரில் வியாழக்கிழமை இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியது:
கிராமப் பகுதிகளில் 16 லட்சம் பேருக்கும், நகரப் பகுதிகளில் 4 லட்சம் பேருக்கும் யானைக்கால் நோய்த் தடுப்பு மாத்திரைகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகளில் 9,580 பணியாளர்கள் ஈடுபடுவர்.
இம்மாத்திரைகளை 2 வயதிற்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்கத் தேவையில்லை. யானைக்கால் நோய்த் தடுப்பிற்கு டிஇசி-100 மில்லி கிராம் மாத்திரைகளும், அல்பண்டசோல்-400 மில்லி கிராம் மாத்திரைகளும் வழங்கப்படும். 2 வயது முதல் 60 வயதுக்குட்பட்டோரில் கர்ப்பிணிகளைத் தவிர, மற்றவர்கள் அல்பண்டசோல்-400 மில்லி கிராம் மாத்திரை ஒன்று உட்கொண்டால் போதும்.
2 முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு டிஇசி-100 மில்லி கிராம் ஒரு மாத்திரை மட்டும் வழங்க வேண்டும். 6 முதல் 15 வயது வரை உள்ளவர்களுககு டிஇசி-100 மில்லி கிராம் மாத்திரை 2 வழங்க வேண்டும். 16 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் டிஇசி-100 மில்லி கிராம் 3 மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். இந்த மாத்திரைகளை உணவு உட்கொள்ளும்போது சேர்த்துச் சாப்பிட வேண்டும். இந்த மாத்திரைகளை உட்கொண்டவுடன் காய்ச்சல், அரிப்பு ஏற்பட்டால் ரத்தப் பரிசோதனை செய்து கொண்டு, தேவையான அளவு கூடுதல் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் என்றார் கருணாகரன்.
மேலும், யானைக்கால் நோய்த் தடுப்பு மாத்திரைகளை அவர் உட்கொண்டு, எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது என்பதைத் தெளிவுபடுத்தினார்.
சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மதிவாணன், மருத்துவப் பணிகள் துணை இயக்குநர் முகமது ஜான், மாவட்ட மலேரியா அலுவலர் போத்திபிள்ளை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.