தினமணி 11.03.2010
20 ஆண்டு தேவையை கருத்தில் கொண்டு நகர் வளர்ச்சித் திட்டங்கள்: மேயர் தகவல்
மதுரை, மார்ச் 10: மதுரை மாநகரில் 20 ஆண்டு தேவைகளைக் கருத்தில் கொண்டு வளர்ச்சித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன என மாநகராட்சி மேயர் கோ.தேன்மொழி தெரிவித்தார்.
மதுரை மாநகராட்சி சார்பில் வளர்ச்சித் திட்ட அறிக்கை தயாரிப்பதில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் எஸ்.செபாஸ்டின் தலைமை வகித்தார். பயிற்சி வகுப்பைத் தொடங்கிவைத்து மேயர் பேசியதாவது:
மாநகராட்சியில் ஜவாஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டம் சார்பில், பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.2,400 கோடியில் வளர்ச்சிப் பணிகளுக்கான திட்டம் தயாரித்து, மத்திய அரசுக்கு அனுப்பியதில் ரூ.900 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி பங்களிப்புத் தொகையாக 30 சதவீதம் அளவுக்கு திட்டத்துக்கு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி மூலம் வைகை கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றி, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் வாய்க்கால், திடக்கழிவு மேலாண்மை, சாலைகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது மதுரை மாநகரம் வளர்ச்சி அடைந்துவரும் நிலையில், அதற்கான கட்டமைப்பு, சாலை வசதிகள் உள்ளிட்ட பணிகளுக்கு, நிதி ஆதாரங்களைப் பெருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இதனால் எந்த ஒரு திட்டமும் புத்தக வடிவில் இல்லாமல், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் வகையில் திட்டம் தயாரிக்க வேண்டும். 20 ஆண்டுகள் தேவையைக் கருத்தில் கொண்டு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மறுஆய்வு செய்து தேவைக்கு ஏற்ற அளவில் புதுப்பிக்கப்படும்.
தேவையான நிதி ஆதாரத்துடன் நகர் வளர்ச்சித் திட்டம் தயாரிப்பதற்கு உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆதரவு தர வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில் வடக்கு மண்டலத் தலைவர் க. இசக்கிமுத்து, தலைமைப் பொறியாளர் கே. சக்திவேல், உதவி ஆணையாளர் (வருவாய்) ரா. பாஸ்கரன் நிர்வாகப் பொறியாளர் சேதுராமலிங்கம், மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.