தினமலர் 16.03.2010
கம்பம் நகராட்சி பள்ளிகளுக்கு ரூ.20 லட்சத்தில் வகுப்பறைகள்
கம்பம் : கம்பம் நகராட்சி பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள் மற்றும் வசதிகள் செய்து கொடுக்க நகராட்சி நிர்வாகம் 20 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது.
கம்பத்தில் தேரடிபள்ளி, பார்க் ரோடு மெயின் பள்ளி, தாத்தப் பன்குளம் உயர்நிலை மற்றும் தொடக்கபள்ளி, ஆலமரத்து பள்ளி, சுங்கம் பள்ளி, மெயின் பள்ளிவாசல் பள்ளி ஆகிய பள்ளிக்கூடங்கள் நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஆண்டு தேரடி பள்ளியில் விளையாட்டு மைதானம், தாத்தப்பன்குளம் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள், எல்லா பள்ளிகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க கருவிகள் நிறுவுதல், கழிப்பறை வசதி செய்து கொடுத்தல், குடிநீர் இணைப்பு கொடுத்தல், மின்விசிறி அமைத்தல், முதல் உதவி செய்வதற்குரிய வசதிகள் செய்து கொடுத்தல் போன்ற வளர்ச்சி பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
நகராட்சி தலைவர் அம்பிகா கூறுகையில், “நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ஆறு பள்ளிகளிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் சப்ளை செய்ய “வாட்டர் பியூரிபையர்‘ அமைக்கப் பட்டுள்ளது. 20 லட்ச ரூபாய் செலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப் பட்டு வருகிறது. முன்மாதிரி பள்ளிகளாக மாற்ற நகராட்சி பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்பாடு செய்து வருகிறோம்‘ என்றார்.
கமிஷனர் அய்யப்பன், பொறியாளர் ஜீவாசுப்ரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.