தினமலர் 05.05.2010
ரூ.20 லட்சத்தில் நந்தம்பாக்கம் பேரூராட்சி அலுவலக கட்டடம்
நந்தம்பாக்கம் : நந்தம்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்திற்கு 20 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய அலுவலக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அடுத்த மூன்று மாதங்களில் இப்பணிகள் நிறைவடைய உள்ளன.
நந்தம்பாக்கம் பேரூராட்சிக்கு சொந்தமான ஐந்து கிரவுண்டு இடத்தில் தற்போது பேரூராட்சி அலுவலகம் இயங்கி வருகிறது. போதிய அறை வசதி இல்லாமல், கடந்த பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான கட்டடத்தில் அலுவலகம் இயங்கி வருவதால், ஊழியர்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும், பேரூராட்சி மாதாந்திர கூட்டம் நடக்கும் அரங்கு, மேல்கூரை உடைந்து தொங்கிக் கொண்டிருந்தது. இதையடுத்து, நந்தம்பாக்கம் பேரூராட்சிக்கு 20 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய அலுவலக கட்டடம் கட்ட நிர்வாகம் முடிவு செய்தது. தரைதளம் 2,000 சதுர அடியிலும், முதல் தளம் 1,000 சதுர அடியிலும் கட்டப்பட உள்ளன. இதற்கான கட்டுமானப் பணிகள் கடந்த சில வாரங்களுக்கு முன் துவங்கியுள்ளன.
இது குறித்து பேரூராட்சி தலைவர் சேகர் கூறுகையில், ‘நந்தம்பாக்கம் பேரூராட்சி அலுவலக கட்டடம் அடுத்த மூன்று மாதங்களில் புதுப்பொலிவுடன் தயாராகும். பேரூராட்சியின் குடிநீர் தேவையை சமாளிக்கும் வகையில், கூடுதல் நீரை சேமிக்க 18 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி மேற்கு குளக்கரை தெருவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் ஓரிரு வாரங்களில் முடிய உள்ளதால், கோடையில் சீரான குடிநீர் வினியோகம் இருக்கும்‘ என்றார்.