20 கட்டிடங்களுக்கு சீல் அனுமதியின்றி கட்டிய 29 கட்டிடங்கள் இடிப்பு
புதுடெல்லி, டிச. 17: டெல்லியில் அனுமதியின்றி கட்டப்பட்ட 29 கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. 20 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
கிழக்கு டெல்லியின் லட்சுமி நகரில் கடந்த மாதம் 15ம் தேதி ஐந்து மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 70 பேர் பலியானார்கள். இந்த கட்டிடத்தில் 2 மாடிகள் அனுமதியில்லாமல் கட்டப்பட்டிருப்பது தெரிந்தது.
நேற்று முன்தினம் ஒரேநாளில் வடமேற்கு டெல்லி மற்றும் கிழக்கு டெல்லியில் 29 கட்டிடங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட பகுதிகள் இடிக்கப்பட்டன. 20 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
ஷாதரா மண்டலத்தில் உள்ள பர்ஷ் பஜார், பாண்டவ் நகர், சஷி கார்டன், காந்தி ஆகிய இடங்களில் 22 கட்டிடங்களிலும், நஜப்கர் மண்டலத்தில் உள்ள ஜமினி பார்க், ராணாஜி என்க்ளேவ், மெயின் ஜரோடா சாலை, வசந்த் கஞ்ச், சாகர்பூர் மேற்கு, கீதாஞ்சலி பார்க், நிலோத்தி ஆகிய இடங்களில் தலா ஒரு கட்டிடத்திலும் அனுமதியின்றி கட்டப்பட்ட பகுதிகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனர்.
ஷாதரா மண்டலத்தில் உள்ள பாண்டவ் நகர், மந்தவளி, லட்சுமிநகர், காந்தி நகர் ஆகிய இடங்களில் 17 கட்டிடங்களுக்கும், பாலம் விரிவு, துவாரகா, நஜப்கர் ஆகிய இடங்களில் 3 கட்டிடங்களுக்கும் சீல் வைக்கப்பட்டது. கிழக்கு டெல்லியின் ஷாதரா மண்டலத்தில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட 150 கட்டிடங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்டிடங்கள் இடிக்கும் போது சம்பந்தபட்ட பகுதி களில் பெரும் பரபரப்பு நிலவியது.