தினமணி 12.11.2009
20 அம்சத் திட்டப் பணி: ஆட்சியர் ஆய்வு
வேலூர், நவ. 12: வேலூர் மாவட்டத்தில் 20 அம்சத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து புதன்கிழமை ஆட்சியர் செ.ராஜேந்திரன் ஆய்வு செய்தார்.
தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி, பொருளாதாரக் கடன், வேளாண் பொறியியல் துறை மூலம் நவீன வேளாண் இயந்திரங்கள் வழங்கும் திட்டம், செயற்கை முறையில் நிலத்தடி நீர் செரிவூட்டும் திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், மழைநீர் சேகரிப்புத் திட்டம் ஆகிய பணிகள குறித்து அவர் ஆய்வு செய்தார்.
மேலும், தோட்டக்கலைத்துறை மூலம் மலைவாழ் மக்கள் மேம்பாட்டுத் திட்டம், தோட்க்கலை கன்றுகள் வளர்க்கும் திட்டம், பொதுப்பணித்துறைக்கு நிர்வாக நில உறுதித் திட்டம், சுகாதாரம், தடுப்பூசி போடுவது, வனத்துறை சார்பில் நடைபெறும் பணிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் வழங்கப்படும் குடிநீர் நிலவரம் குறித்து அவர் கேட்டறிந்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை, மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை சார்பில் நடத்தப்படும் மாணவ–மாணவிகள் விடுதிகள் நிலவரம், அவர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்கள், கல்வி உதவித்தொகை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் ந.அருள்ஜோதிஅரசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் இரா.ராதாகிருஷ்ணன், மகளிர் மேம்பாட்டுத் திட்ட அலுவலர் பிச்சைக்கண்ணு, வேளாண் பொறியியல் துறை பொறியாளர் ஸ்ரீதர், தோட்டக்கலைத்துறை அலுவலர் பொன்னு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ரஷீத், நகராட்சிகள் மண்டல துணை இயக்குநர் பாலசுப்பிரமணியம், தாட்கோ மேலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.